

2016-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் இடையிலான மாதங்களில் வரி வருவாய் அதிகரித்துள்ளதாக அருண்ஜேட்லி குறிப்பிட்டார். பணமதிப்பு நீக்க நடவடிக்கை இருந்தபோதிலும் 2015 ம் ஆண்டின் இதே மாதங்களுடன் ஒப்பிடுகிற போது நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் அதிகரித்துள்ளது என்றார். முன்கூட்டிய மதிப்பீட்டை வெளியிட்டு பேசிய ஜேட்லி மேலும் கூறியதாவது: .
வரி வருவாய் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என பொருளாதார விவகாரத்துறை செயலர் கூறியதையும் ஜேட்லி சுட்டிக் காட்டினார். 2015 ம் ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் மாதங்களைவிட 2016 ம் ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் மாதங்களில் ஒட்டுமொத்த நேரடி வரி வருவாய் 12.01 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் மறைமுக வரி வசூலும் 2015-ம் ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 2016 ஏப்ரல் முதல் நவம்பர் மாதங்களில் மத்திய கலால் வரி வசூல் 43 சதவீதமும், சேவை வரி வசூல் 23.9 சதவீதமும், சுங்க வரி 4.1 சதவீதமும் 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள் டிசம்பர் மாத நிலவரப்படி என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பணமதிப்பு நீக்க நடவடிக்கை களுக்கு பிறகு மக்களிடம் பணப்புழக்கம் குறைவாக இருந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் மறைமுக வரி வருவாய் 14.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
சுங்க வரி வசூல் மட்டும் 2015 ஆண்டின் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 6.3 சதவீதம் குறைந்துள்ளது. தங்கம் இறக்குமதி குறைந்ததால் சுங்க வரி வருவாய் குறைந்துள்ளது. உற்பத்தி துறையின் வளர்ச்சி காரணமாக மத்திய கலால்வரி 2016 டிசம்பர் மாதத்தில் 31.6 சதவீதம் அதிகரித்துள்ளது. சேவை வரி வசூலும் 2016 டிசம்பர் மாதத்தில் 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 2016 டிசம்பர் மாதத்தில் நேரடி வரி வருவாய், அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகிறபோது 12.8 சதவீதம் உயர்ந்துள்ளது எறும் ஜேட்லி கூறினார்.
நவம்பர் மாதத்தில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. இது டிசம்பர் மாதத்திலும் தொடர்ந்தது என்றாலும், நேரடி மற்றும் மறைமுக வரி வசூல் அதிகரித்துள்ளது என்றார். 2016 நவம்பர் மாதத்தில் மாநிலங்களில் வாட் வரியும் அதிகரித்துள்ளது. 2016 நவம்பர் மாத வரி வசூலில் பழைய ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் பெறப்பட்டன. வாட் வரியும் பழைய ரூபாய் நோட்டுகளில் பெறப்பட்டன. இதனால் பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு வாட் வரி வருவாய் அதிகரித்தது என்றும் ஜேட்லி கூறினார்.