பிளிப்கார்ட்டுடன் இணைகிறதா ஸ்நாப்டீல்?

பிளிப்கார்ட்டுடன் இணைகிறதா ஸ்நாப்டீல்?
Updated on
2 min read

பிளிப்கார்ட் நிறுவனத்துடன் ஸ்நாப்டீல் நிறுவனத்தை இணைக்கும் பணி தொடங்கி இருப்பதாகத் தெரிகிறது. இதில் எந்த விதமான பணப் பரிமாற்றமும் நடக்காமல், பங்குகளுடைய உரிமை மாற்றங்கள் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வேளை இணைப்பு நடக்கும்பட்சத்தில் ஸ்நாப்டீல் நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வைத்திருக்கும் சாப்ட்பேங்க், இணைந்த நிறுவனத்தில் 150 கோடி டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. டைகர் குளோபல் நிறுவனம் பிளிப்கார்டில் வைத்துள்ள மூன்றில் ஒரு பகுதி பங்கினை வாங்கவும் சாப்ட்பேங்க் திட்டமிட்டிருக்கிறது. அதாவது டைகர் குளோபல் பிளிப்கார்ட்டில் முதலீடு செய்திருக்கும் அசல் தொகையை வெளியே எடுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

இது தவிர ஸ்நாப்டீல் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான பிரீசார்ஜ் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை பேடிஎம் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்நாப்டீல் நிறுவனத்தில் 33 சதவீத பங்குகளை சாப்ட்பேங்க் வைத்திருக்கிறது. ஆனாலும் ஸ்நாப்டீலில் தொடர்ந்து முதலீடு செய்ய இந்த நிறுவனம் விரும்பவில்லை. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த ஸ்நாப்டீல் நிறுவனத்தால் முடியவில்லை. மேலும் செலவுகள் 2 கோடி டாலரில் இருந்து 40 லட்சம் டாலராக குறைக்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. ஆனாலும் நிறுவனத்தில் செயல்பாடுகளில் முன்னேற்றம் இல்லை. அதனால் நிறுவனம் இணைக்கப்படலாம் என்னும் கருத்து பலமாக இருக்கிறது.

ஸ்நாப்டீல் நிறுவனத்துக்கு வட இந்தியா மற்றும் வட கிழக்கு இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு இந்த பகுதிகளில் இல்லை என்பதால் ஸ்நாப்டீல் இணைப்பு சாதகமாக இருக்கும் என பிளிப்கார்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்நாப்டீல் நிறுவனத்தில் கலாரி கேபிடல் மற்றும் நெக்ஸஸ் வென்ச்சர் பார்ட்னர்ஸ் ஆகிய நிறுவனங்கள் 8 மற்றும் 10 சதவீத பங்குகள் வைத்துள்ளன. ஸ்நாப்டீலில் இருந்து வெளியேற கணிசமான மதிப்பீட்டினை எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்திருக்கிறது.

ஸ்நாப்டீல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 150 கோடி டாலர் முதல் 200 கோடி டாலர் வரை இருக்கும் என முன்பு மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சந்தை மதிப்பு 100 கோடி டாலர் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு 650 கோடி டாலர் அளவில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு இருந்தது.

தவிர, ஆறு மாதம் நிறுவனத்தை நடத்துவதற்கு தேவையான தொகை மட்டுமே ஸ்நாப்டீல் வசம் இருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த பேச்சு வார்த்தை தொடங்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இன்னும் சில மாதங்களில் இதற்கான விடை கிடைக்கக் கூடும்.

மீண்டும் மளிகை விற்பனையில் பிளிப்கார்ட்

மளிகை பொருள் விற்பனையில் மீண்டும் களம் இறங்க திட்டமிட்டிருக்கிறோம் என பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார். இந்தியாவில் மளிகை பொருட்களின் சந்தை மதிப்பு 40 கோடி டாலர் முதல் 60 கோடி டாலர் வரை இருக்கும். அதனால் இந்த துறையில் களம் இறங்குகிறோம் என தெரிவித்தார்.

கையகப்படுத்தல் குறித்த கேள்விக்கு, நாங்கள் பரிசீலனையில் இருக்கிறோம். நிறுவனத்தின் அளவு முக்கியமல்ல, நாங்கள் சிறிய நிறுவனங்களையும் கையகப்படுத்தி இருக்கிறோம், மிந்திரா, ஜபாங் ஆகிய நிறுவனங்களையும் கையகப்படுத்தி இருக்கிறோம் என தெரிவித்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியர்பை என்னும் பெயரில் மளிகைபொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை பிளிப்கார்ட் விற்றுவந்தது. ஆனால் வாடிக்கையாளர்களிடம் பெரிய வரவேற்பு இல்லாததால் அடுத்த சில மாதங்களில் அந்த பிரிவினை பிளிப்கார்ட் மூடியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in