

மொபைல் அப்ளிகேஷன் மூலமாக டாக்ஸி சேவையை வழங்கிவரும் ஓலா பொதுத்துறை நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது.
பல்வேறு நிறுவனங்களுக்கு ஓலா நிறுவனம் டாக்ஸி சேவையை வழங்கி வருகிறது. மேலும் அந்த நிறுவனங்களுக்கு ஏற்ப பிரத்யேக சேவையை ஓலா நிறுவனம் வழங்கி வருகிறது. “தற்போது பொதுத்துறை நிறுவனங்களில் எங்களது சேவையை விரிவுப் படுத்த இருக்கிறோம். அடுத்த ஆண்டிற்குள் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களுடன் பேச இருக்கிறோம். அடுத்த வருடத் திற்குள் இந்தியாவில் மிகச் சிறந்த 100 நிறுவனங்களை தங்களது வாடிக்கையாளராக்க ஓலா நிறுவனம் உத்தேசித்துள்ளது” என்று ஓலா நிறுவனத்தின் கார்ப்பரேட் பிரிவின் தலைவர் அங்கித் ஜெயின் தெரிவித்துள்ளார்.
ஆனால் எந்தெந்த பொதுத்துறை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவது பற்றி அங்கித் ஜெயின் கருத்துக் கூறவில்லை.
ஓலா கார்ப்பரேட் சேவை இந்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. ஏற்கெனவே ஏர்டெல், ரிலையன்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, கோத்ரேஜ், தாஜ் ஹோட்டல்ஸ் போன்ற நிறு வனங்களுக்கு தனது சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 100 நகரங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்ப்பரேட் பணி யாளர்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருவதாக ஓலா தெரிவித்திருக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்கள் வழக்கமான டிராவல் ஏஜென்ட்கள் மூலம் முன்பதிவு செய்து வருகிறது. ஓலா மூலம் செல்லும் பட்சத்தில் பெரும் தொகையை இந்த நிறுவனங்கள் சேமிக்க முடியும் என்று ஓலா கூறியிருக்கிறது.