

ஹோண்டா மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் முதல் முறையாக பெண்மணி ஒருவர் இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார். ஆண்கள் மட்டுமே ஹோண்டா இயக்குநர் குழுவில் ஆதிக்கம் செலுத்திவருவதாக நிலவிவரும் பேச்சுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்க ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தொழில்துறை வல்லுநரான ஹிடிகோ குனில் (66) இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ளார். இதேபோல பிரேஸிலைச் சேர்ந்த இஸாயோ மிஸோகுசி என்ற பெண், நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஹோண்டா நிறுவனத்தின் தென் அமெரிக்க பிரிவில் 30 ஆண்டுகளாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் ஜப்பானியர்கள் அல்லாதவர்களை நிறுவனத்தின் உயர் பதவியில் நியமிப்பதில்லை என்றிருந்த நிலையையும் ஹோண்டா நிறுவனம் மாற்றியுள்ளது. மற்ற ஜப்பானிய நிறுவனமான நிசான் மோட்டார், பிரான்ஸின் ரெனால்ட் எஸ்ஏ ஆகியவற்றிலும் பெண்கள் இடம்பெறவில்லை.