

பேங்க் ஆப் பரோடா நிகர லாபம் 5% சரிவு
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 5 சதவீதம் சரிந்து 1,104 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,168 கோடி ரூபாயாக இருந்தது. மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் ரூ.10,447 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ11,817 கோடியாக இருக்கிறது.
வரி செலவுகள் மற்றும் வாராக்கடன்களுக்காக ஒதுக்கிய தொகை அதிகமாக இருந்ததன் காரணமாக நிகர லாபம் சரிந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 3.32 சதவீதமாக இருக்கிறது. நிகர வாராக்கடன் சிறிதளவு குறைந்து 1.74 சதவீதமாக இருக்கிறது.
சிண்டிகேட் வங்கியின் லாபம் ரூ. 315 கோடி
சிண்டிகேட் வங்கியின் செப்டமர் காலாண்டு நிகர லாபம் 33 சதவீதம் சரிந்து 315 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நிகரலாபம் 470 கோடி ரூபாயாக இருந்தது.
இந்த காலாண்டில் வங்கியின் வரி செலவுகள் 100 மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் சுமார் ஒரு கோடி ரூபாய் இருந்த வரி செலவுகள் இப்போது 100 கோடி ரூபாயாக இருக்கிறது. இதே போல வாராக்கடன்களுக்கான ஒதுக்கிடு செய்த தொகையும் 339 கோடி ரூபாயிலிருந்து 537 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. மொத்த வருமானமும் 4,850 கோடி ரூபாயிலிருந்து ரூ.5,680 கோடியாக அதிகரித்திருக்கிறது. மொத்த வாராக்கடன் 3.43 சதவீதமாக இருக்கிறது.
கார்ப்பரேஷன் வங்கியின் லாபம் 10 மடங்கு உயர்வு
பொதுத்துறை வங்கியான கார்ப்பரேஷன் வங்கியின் நிகர லாபம் 10 மடங்கு உயர்ந்திருக்கிறது. கடந்த செப்டம்பர் காலாண்டில் 15 கோடி ரூபாய் அளவில் இருந்த நிகரலாபம் இப்போது 160 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கிறது. வட்டி மூலம் கிடைக்கும் வருமானம் 11 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
மொத்த வருமானமும் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் 4,773 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 5,229 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் 3.17 சதவீதமாக இருந்த வாராக்கடன் அளவு இப்போது 4.45 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. வர்த்தகத்தின் முடிவில் 0.15% சரிந்து 335.70 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
சிட்டி யூனியன் வங்கியின் லாபம் ரூ. 93 கோடி
தனியார் வங்கியான சிட்டி யூனியன் வங்கியின் செப்டமர் காலாண்டு நிகர லாபம் 11 சதவீதம் உயர்ந்து ரூ.93 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் வங்கியின் நிகரலாபம் ரூ.84 கோடியாக இருந்தது. மொத்த வருமானம் 697 கோடி ரூபாயிலிருந்து 772 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
நாங்கள் 100 கோடி ரூபாய்க்கும் மேலான கடன்களை கொடுப்பதில்லை, மாறாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையே கவனம் செலுத்துகிறோம் என்றும் அவை எங்களுக்கு ஏற்றதாக இருக்கிறது என்று வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் என்.காமகோடி தெரிவித்தார். மேலும் நாங்கள் லாப வரம்பை உயர்த்துவதில் கவனமாக இருக்கிறோம் என்றார்.