

பங்குச் சந்தையில் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தைக் கொண்டு வருவதற்காக பட்டியலிடப்படும் நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளைக் கொண்டு வருவதில் பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) தீவிரமாக இறங்கியுள்ளது. நிறுவனங்கள் மட்டுமின்றி அதில் உயர் பதவியில் உள்ளவர்களுக்குமாக இப்புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது என்று செபி தலைவர் யு.கே. சின்ஹா கூறினார்.
இப்புதிய விதிமுறையின்படி பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ள நிறுவனங்கள் அனைத்தும் அதன் உயர் பதவியில் உள்ளவர்களது சம்பள விவரத்தை வெளியிட வேண்டும். மேலும் நிறுவனங்களின் செயல்பாடு குறித்த தகவல் தரும் ஊழியர்களுக்கென தனிக் கொள்கை, இயக்குநர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத் துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது இத்தகைய நடவடிக்கைகள் மூலம் நிறுவனங்களில் குறைந்தபட்ச பங்குத் தொகைகளைக் கொண்டுள்ளவர்களின் நலனைக் காக்க செபி திட்டமிட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கை களோடு பங்குச் சந்தையில் உள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்த கடந்த 20 ஆண்டுகளாக அமலில் உள்ள வலுவற்ற சட்டத்துக்கு மாற்றாக புதிய விதிமுறைகளைக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த இயக்குநர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
இதுபோல பங்குச் சந்தையில் பணியாற்றிக் கொண்டு உள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசுத் துறை அதிகாரிகள், ஒழுங்குமுறை ஆணையக அதிகாரிகள், நீதித்துறையைச் சார்ந்தவர்கள் உள்ளிட்டோர் அதாவது பங்கு விலை நிர்ணயிப் பதில் முக்கிய பங்காற்றுவோர் இத்தகைய தகவலை கசிய விடுவோர், உள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் இனி தீவிரமாக கண்காணிக்கப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேசமயம், தெரியாமல் தவறு செய்வோர் மற்றும் தெரிந்தே தவறு செய்வோரை இனங்கண்டு, முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
இது தவிர, கூடுதலாக பங்குச் சந்தையில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் கூடுதலாக நிதி திரட்டுவது ஆகியன குறித்து அரசு முடிவு எடுத்த பிறகே செபி ஆராயும் என்று தெரிகிறது.
செபியின் வரைவு அறிக்கை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டு அதற்கு பொதுமக்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளன.
நிறுவனங்களை தனியார் துறை மதிப்பீடு செய்யும் புதிய முறையை அறிமுகப்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை செபி ஆய்வு செய்வதோடு அந்நிறுவனங்களின் செயல் பாடுகளை தனியார் நிறுவனங் களும் மதிப்பீடு செய்யும்.
புதிய சட்டம், நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைவரின் ஊதியம் குறித்த விவரம் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டியதை கட்டாயமாக்கும் என்று தெரிகிறது. பிற இயக்குநர்களின் ஊதியம் மற்றும் ஊழியர்களின் சம்பள விகிதத்தை நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும் என்று தெரிகிறது. புதிய நிறுவன சட்டத்திலும் இதுபோன்ற விதிமுறைகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிகிறது.
உள்பேர வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. இது இத்தகைய பேரத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
செபிக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு, குடியரசுத் தலைவரால் இரண்டு முறை நீட்டிப்பு வழங்கப்பட்டது. இது இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதியுடன் காலாவதியானது.
செபி நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் இந்த புதிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாகக் கொண்டு வரப்பட வேண்டும்.