

தகவல் தொழில் நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் இன்ஃபோசிஸ் பிபிஓ-வின் தலைவர் வி. பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். இவரது ராஜிநாமா ஏற்கப்பட்டு இம்மாதம் 31-ம் தேதி அவர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார் என இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக பதவி விலகி வருகின்றனர். இந்நிலையில் பிபிஓ பிரிவின் தலைவராக இருந்த பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜிநாமா செய்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
1991-ம் ஆண்டு நிறுவனத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிக்க சேர்ந்த பாலா, இப்போதைய தலைமைச் செயல் அதிகாரி எஸ்.டி. சிபுலாலுக்குப் பிறகு அப்பதவிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. சிபுலால் 2015-ம் ஆண்டு ஓய்வு பெற உள்ளார்.
இதனிடையே பயோகான் நிறுவனத் தலைவர் கிரண் மஜும்தார் ஷாவை இயக்குநர் குழுவில் சுயேச்சை உறுப்பினராக சேர்த்துள்ளது இன்ஃபோசிஸ். அதேபோல யுபி பிரவீண் ராவ் முழு நேர இயக்குநராக குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.
இன்ஃபோசி்ஸ் நிறுவனத்தில் ஆரம்ப காலத்தில் பணியில் சேர்ந்து நிறுவன வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். அவர் இல்லாமல் நிறுவனத்தை நிர்வகிப்பது சற்று சிரமமான விஷயம். அவரது அணுகுமுறையும், புத்தி சாதுர்யமும் மிகவும் அலாதியானது என்று நிறுவனத்தின் தலைவர் நாராயணமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.
நிறுவன நிதிச் செயல்பாடுகளில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர் பாலா. நிதி நிர்வாகத்தில் அவரது செயல்பாடு மிகச் சிறப்பானது என்று இன்ஃபோசிஸ் தலைமைச் செயல் அதிகாரி எஸ்.டி. சிபுலால் தெரிவித்தார்.
பாலகிருஷ்ணன் ராஜிநாமா மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. எந்த ஒரு நிறுவனமும் இவரைப் போன்ற திறமைசாலியைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று இயக்குநர் குழுவின் முன்னாள் உறுப்பினர் மோகன் தாஸ் பை தெரிவித்தார். பாலகிருஷ்ணன் வெளியேற்றம் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு மிகப் பெரும் இழப்பு. பாலாவைப் போன்ற திறமைசாலிகளை இழப்பது எந்த வொரு நிறுவனத்துக்கும் மிகப் பெரிய இழப்பாக முடியும். பாலா மிகவும் திறமையானவர், நாராயண மூர்த்தியின் நம்பிக்கைக்கு பாத்திர மானவர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த வியாழக்கிழமை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும், இன்ஃபோசிஸ் லேபின் தலைவருமான சுப்பிரமணியம் கோபராஜு ராஜிநாமா செய்தார். இவர் 1998-ம் ஆண்டு முதல் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது விலகலைத் தொடர்ந்து முக்கிய பொறுப்பில் உள்ள பலரும் வெளியேறி வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் நாராயணமூர்த்தி மீண்டும் நிறுவனத்தின் செயல் தலைவராக நுழைந்த பிறகு பலர் வெளியேறியுள்ளனர்.
கடந்த ஆகஸ்டில் அமெரிக்கா வில் உள்ள இந்நிறுவனத்தில் பணியாற்றிய அசோக் வெமூரி பதவி விலகினார். இவரைத் தொடர்ந்து நிதிச் சேவை பிரிவின் தலைவராக இருந்த சுதிர் சதுர்வேதி ராஜிநாமா செய்தார்.
கடந்த மாதம் இன்ஃபோசிஸ் குளோபல் தலைவர் பஸப் பிரதான் நிறுவனத்திலிருந்து வெளியேறினார். வட அமெரிக்காவிலுள்ள நிறுவன பிரிவின் தலைவர் ஸ்டீபன் ஆர். பிராட் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்துள்ளார். கடந்த செப்டம்பரில் ஆஸ்திரேலியாவில் உள்ள இன்ஃபோசிஸ் பிபிஓ மையத்தின் கார்த்திக் ஜெயராமன் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.
இன்ஃபோசிஸ் நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் குறைக்கப்பட்டுள்ளது. 600 ஆக இருந்த எண்ணிக்கை இப்போது 200 ஆகக் குறைந்துள்ளது. இருப்பினும் இது குறித்து இன்ஃபோசிஸ் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.