

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில், தேர்தல் சூடு இப்போதே பிடிக்கத் தொடங்கிவிட்டது. இதற்கு ஆரம்பமாக தேர்தல் நிதி அளிக்க நிறுவனங்கள் வரிசையில் காத்திருக்கின்றன.
அம்பானி, மிட்டல், பிர்லா குழும நிறுவனங்கள் தேர்தல் அறக்கட்டளை தொடங்கியுள்ளன. அரசியல் கட்சிகளுக்கு இந்த அறக்கட்டளை மூலம் தேர்தல் நிதி அளிக்கப்படும். இந்நிறுவனங்கள் தவிர பிற தொழி்ல்களில் ஈடுபட்டுள்ள 24-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தேர்தல் அறக்கட்டளை தொடங்கும் திட்டத்தில் உள்ளன.
இந்த அறக்கட்டளைகள் பதிவு செய்யப்பட்டு இவை தேர்தல் அறக்கட்டளையாக செயல்படும். இவை மூலம் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நிதிக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அரசு அறிவித்த விதிமுறைகளின்படி பெரும் தொழில் குழுமங்கள் தேர்தல் அறக்கட்டளை தொடங்கியுள்ளன.
இந்த அறக்கட்டளையில் வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால், பார்தி குழுமத்தின் சுநீல் மிட்டல், ரிலையன்ஸ் குழுமத்தின் அனில் அம்பானி மற்றும் கே கே பிர்லா குழுமம் ஆகியன இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த அறக்கட்டளை லாப நோக்கில்லாத நிறுவனமாக கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 25-ன் படி பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு தகவல்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் முன்னணி சட்ட ஆலோசனை மையங்கள் அளித்த தகவலின்படி இதுவரை 25 பெரும் தொழில் குழுமங்கள் இத்தகைய தேர்தல் அறக்கட்டளையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், எந்த ஒரு நிறுவனமும் அந்நிறுவனத்தின் பெயரையோ துணை நிறுவனத்தின் பெயரையோ பரிசீலனைக்காக குறிப்பிடவில்லை. ஆனாலும் அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் அளிக்கும் நிதி குறித்த விவரம் வெளிப்படைத் தன்மையோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.
தேர்தல் நிதியம் தொடங்கிய நிறுவனங்கள் தங்களது நிறுவன முகவரி மற்றும் குழும நிறுவனம் பற்றிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளன.
ஜான்ஹித் தேர்தல் அறக்கட்டளை என்ற பெயரில் வேதாந்தா குழுமமும், சத்யா தேர்தல் நிதியத்தை பார்தி குழுமமும், மக்கள் தேர்தல் நிதியத்தை ரிலையன்ஸ் குழுமமும், சமாஜ் தேர்தல் நிதியத்தை கே.கே. பிர்லா குழுமமும் அமைத்துள்ளது.
இது தவிர பிரதிநிதி தேர்தல் அறக்கட்டளை என்ற பெயரில் ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தைத் தொடங்கிய நிறுவனம் பெயர் வெளியிடப்படவில்லை.
மிகவும் எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக இவை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக அரசியல் கட்சிகளுக்கு பெரும் தொழில் குழுமங்கள் நிதி அளிப்பது தொடர்பாக மிகுந்த சர்ச்சை ஏற்பட்டது.
இதில் குறிப்பாக ஆதித்யா பிர்லா குழுமம் அளித்த நிதி மிகுந்த சர்ச்சையை உருவாக்கியது.
ஆனால் தாங்கள் எத்தகைய விதியையும் மீறவில்லை என்றும் அறக்கட்டளை மூலம் பணம் வழங்கவில்லை என்றும் இந்த குழுமம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் பல தொழில் நிறுவனங்கள் தங்களது அறக்கட்டளை மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்து வந்தன.
டாடா, பிர்லா குழுமம், பார்தி குழுமம் ஆகி ஏற்கெனவே இதுபோன்று தங்களது அறக்கட்டளை மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்ததாக ஒப்புக் கொண்டுள்ளன. நிதி அளிப்பை முறைப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் அறக்கட்டளை தொடங்கும் முறையை அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி வரும் வழிமுறையை முறைப்படுத்தவும், அதில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி தொழில் நிறுவனங்கள் தேர்தல் அறக்கட்டளையை லாப நோக்கில்லாத நிறுவனமாக பதிவு செய்து கொள்ள வழிவகுக்கப்பட்டது.
தேர்தல் நிதிக்காக ஒதுக்கப்பட்ட தொகையில், அதே நிதி ஆண்டில் 95 சதவீத தொகைக்கு வரி விலக்கு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த நிதியைப் பெறும் அரசியல் கட்சிகள் நிரந்தர கணக்கு எண்ணை அளிக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து நிதி பெற்றால், பெறப்படும் நபரின் பாஸ்போர்ட் எண் குறிப்பிடப்பட வேண்டும்.
ஆனால் தேர்தல் அறக்கட்டளைகள் வெளிநாட்டி லிருந்தோ, வெளி நாட்டிலுள்ள நிறுவனங்களிடமிருந்தோ நிதி பெறக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதில் விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க புதிய நிறுவன சட்டம் வழிவகை செய்துள்ளது.