

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல் ஆகிய இரு நிறுவனங்களின் இணைப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரு நிறுவனங்களின் இணைப்புக்காக ஒப்பந்தம் தயாராகிவிட்டது என்றும் ஒரு வாரம் முதல் 10 நாட்களில் இரு நிறுவனங்களும் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இணைப்பு முழுமையடையும் பட்சத்தில் நாட்டின் மூன்றாவது டெலிகாம் நிறுவனமாக புதிய நிறுவனம் இருக்கும். 19.6 கோடி வாடிக்கையாளர்கள் புதிய நிறுவனத்தில் இருப்பார்கள். இரு நிறுவனங்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி தேவையில்லை. ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற்று நிறுவனங்கள் இணைய 4 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகே நிறுவனத்தின் பெயர் மற்றும் பிராண்ட் மாற்ற முடியும்.
இந்த இரு நிறுவனங்கள் கடந்த டிசம்பரில் இணைவது குறித்து முடிவெடுத்தன. 90 நாட்களுக்குள் கையெழுத்திடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன் பிறகு இரு முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டது.
கடந்த நிதி ஆண்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் நிகர கடன் ரூ.41,362 கோடி ஆகும். ஏர்செல் நிறுவனத்தின் கடன் குறித்த தகவல் ஏதும் இல்லை. கடந்த நிதி ஆண்டில் ரூ.22,000 கோடி அளவுக்கு நிறுவனத்தின் வருமானம் இருந்தது.