

வாகன உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டுள்ள மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் முதல் முறையாக பழ விற்பனையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் சபோரோ எனும் பிராண்டு பெயரில் பழ விற்பனை மையங்களைத் தொடங்க மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளில் 200 விற்பனை நிலையங்களைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனசெயல் இயக்குநர் பவன் கோயங்கா தெரிவித்தார். இந்த திட்டத்துக்கு ரூ. 20 கோடி முதலீடு செய்துள்ளது.
ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பழ வகைகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
இதன் முதலாவது விற்பனையகம் ஹைதராபாதில் தொடங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக பெருநகரங்களில் உள்ள பிரதான விற்பனையகங்களில் சபோரோ பிராண்ட் பழங்கள் விற்பனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் திராட்சைப்பழம் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக அவர் கூறினார்.
பழங்களை பேக் செய்யும் மையம், பழுக்க வைக்கும் சேம்பர் மற்றும் குளிர்பதன அறை உள்ளிட்டவையும் அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.