

கிழக்குக் கடற்கரைச் சாலை (ஈ.சி.ஆர்.) சென்னையில் இருந்து தொடங்கும் இந்தச் சாலைக்கு ரியல் எஸ்டேட் துறையினர் மத்தியில் தனி மதிப்பு. சென்னை நகரப் பகுதியில் விற்பனையாகும் அளவுக்கு இந்தச் சாலையில் நிலத்தின் மதிப்பு எகிறியுள்ளதே இதற்கு முக்கியக் காரணம்.
சென்னையில் இருந்து தூத்துக்குடி வரையில் இரு வழிகளைக் கொண்டுள்ள இந்தச் சாலையில் குறிப்பிடத்தக்க அளவு ரியல் எஸ்டேட் துறையினரை ஈர்த்துள்ளது சென்னை, காஞ்சிபுரம் பகுதிகள் மட்டுமே. வார இறுதி நாட்களை உற்சாகமாகக் கழிக்க ஏராளமான ரிசர்ட்டுகள் இந்தச் சாலையிலேயே உள்ளன. புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் அமைந்துள்ளதும் இந்தச் சாலையில்தான். இந்தச் சாலை வழியாகவும், இதன் இணைப்பு சாலையான பழைய மகாபலிபுரச் சாலையில் (ஓ.எம்.ஆர்.) ஏராளமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அணிவகுத்துள்ளன.
இதனால் ஐ.டி. தொழிலில் பணிபுரியும் மென் பொறியாளர்கள் வீடு வாங்கும் விருப்பப் பகுதியாக உள்ளது கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள பகுதிகள். இதன் காரணமாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வீடு கட்டும் திட்டங்களை இங்குச் செயல்படுத்தி வருகின்றன. வீட்டு மனை மட்டுமல்லாமல், கடற்கரையோரம் வீடுகள் கட்டுவதற்கும் இங்கு ஆர்வம் காட்டுகின்றனர் மக்கள். திருவான்மியூரில் கடற்கரை அருகே நிறைய வீடுகள் கட்டப்பட்டுவருவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். மேலும் பண்ணை வீடுகள், வில்லாக்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெருகியுள்ளன. 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட நிலத்தின் மதிப்பு இந்தப் பகுதியில் இரு மடங்கு உயர்ந்துள்ளது.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள நீலாங்கரை, பாலவாக்கம், வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி ஆகிய பகுதிகளில் வீடுகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சாலை வசதி குறைவாக இருப்பது, விபத்துகள் அடிக்கடி நடப்பது, முறையான கழிவு நீர் அகற்ற வசதி இல்லாதது போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு பிரச்னைகள் இங்கு நிலவுகின்றன. இருந்தாலும், இங்கு வீடு வாங்கவும், வீடு கட்டவும் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாகக் கூறுகின்றனர் கட்டுமான நிறுவனங்கள்.
கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் மட்டுமே இந்தப் போக்கு காணப்படுவது நகர வளர்ச்சியின் தாக்கத்தையே காட்டுகிறது.