

வாராக்கடன் பட்டியலில் உள்ள 12 நிறுவனங்களின் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க வங்கியாளர்கள் இன்று கூடுகின்றனர். இந்த 12 நிறுவனங்களும் ரூ.2.50 லட்சம் கோடி அளவுக்கு வங்கிக்கு செலுத்த வேண்டும். மொத்த வாராக்கடனில் இது 25 சதவீதமாகும்.
புஸான் ஸ்டீல், எஸ்ஸார் ஸ்டீல், புஸான் பவர் அண்ட் ஸ்டீல், அலோக் இண்டஸ்ட்ரீஸ், அம்டெக் ஆட்டோ, மோனெட் இஸ்பத், லாங்கோ இன்பிரா, எலெக்ட்ரோ ஸ்டீல், இரா இன்பிரா, ஜேபி இன்பிரா டெக், ஏஜிபி ஷிப்யார்டு மற்றும் ஜோதி ஸ்டெரக்ச்சர்ஸ் ஆகிய 12 வாராக்கடன் நிறுவனங்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.
இதில் ஆறு நிறுவனங்களுக்கு எஸ்பிஐ தலைமையிலான வங்கி கள் கடன் வழங்கி இருக்கின்றன. மற்ற நிறுவனங்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ, யூனியன் வங்கி, ஐடிபிஐ வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை கடன் வழங்கி இருக்கின்றன.
இன்று தொடங்கவுள்ள கூட்டத் தில் ஆறு நிறுவனங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல வங்கிகள் கடன் வழங்கி இருப் பதால், ஒருமித்த முடிவினை எடுப்பதற்காக கூடியிருப்பதாக வங்கியாளர் ஒருவர் கூறினார். மேலும் நொடிந்துபோன இந்த நிறுவனங்களை சீர்செய்வதற்கு நிபுணர்கள் குழு அமைக்கவும் வாய்ப்பு இருப்பதாக தெரி கிறது.
இந்த நடவடிக்கை குறித்து பெரும்பாலான நிறுவனங்கள் கருத்து தெரிவிக்கவில்லை. சில நிறுவனங்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், வங்கிகளின் இந்த நடவடிக்கை குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என கருத்து தெரிவித்தார்.
இந்த நிறுவனங்கள் மீதான வழக்கு தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்துக்கு செல்லும் பட்சத் தில், நிறுவனத்தை மறுசீரமைக்க 180 நாட்கள் வழங்கப்படும். தேவைப்பட்டால் கூடுதலாக 90 நாட்கள் வழங்கப்படும். அதன்பிறகு மறுசீரமைப்புத் திட்டம் தயாரிக்க முடியவில்லை என்றால் நிறுவனத்தின் சொத்துகளை விற்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
வங்கித்துறையில் மொத்தம் ரூ.8 லட்சம் கோடி வாராக்கடன் இருக்கிறது. இதில் ரூ.6 லட்சம் கோடி பொதுத்துறை வங்கிகளில் உள்ளது.