

சந்தை ஆதிக்கம் (market dominance)
ஒரு விற்பனையாளரிடமோ அல்லது ஒரு சில விற்பனையாளர்களிடமோ சந்தை மையப்படுத்தி இருந்தால், அந்த விற்பனையாளர்கள் தங்களிடையே போட்டியைத் தவிர்த்து சந்தை மீது, அதாவது மற்ற விற்பனையாளர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் ஆதிக்கத்தைச் செலுத்தலாம். இதற்கு சந்தை ஆதிக்கம் என்று பெயர். சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் விற்பனையாளர்கள் பொருளின் விலை, தரம், அளவு ஆகியவற்றைத் தன்னிச்சையாக நிர்ணயித்து மற்ற விற்பனையாளர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் கேடு விளைவிக்கலாம். எனவே, சந்தை ஆதிக்கத்தை முறியடிப்பது அவசியம்.
சந்தை சக்தி (market power)
ஒரு விற்பனையாளர் தான் விற்பனை செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயிக்கும் சக்தி கொண்டிருந்தால் அந்த விற்பனையாளருக்கு சந்தை சக்தி உண்டு என்று அர்த்தம். அதாவது, ஒரு விற்பனையாளர் தன்னுடைய பொருளுக்கு நிர்ணயிக்கும் விலையை அப்பொருளை வாங்குபவர்களும் ஏற்றுக்கொள்ளும் நிலை இருந்தால், அது சந்தை சக்தி. இது எப்போது சாத்தியம்?
சந்தையில் ஒரு சில விற்பனையாளர்கள் மட்டும் இருக்கும் போது இது சாத்தியம். சந்தை சக்தி இருக்கும் விற்பனையாளர்கள் வாங்குபவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வியாபாரம் செய்யும் நிலை ஏற்படும். எனவே, விற்பனையாளரிடம் உள்ள சந்தை சக்தியை குறைப்பது அவசியம்.
சந்தை விலை
பொதுவாக வாங்குபவர் ஒரு பொருளுக்கு கொடுக்கும் விலைக்குப் பெயர் சந்தை விலை. சந்தை விலை என்பது சந்தையில் நிலவும் அளிப்பு, தேவையைப் பொறுத்து அமையும். ஒரு நேரத்தில் ஒரு பொருளின் அளிப்பைவிட தேவை அதிகமாக இருந்தால் சந்தை விலையும் அதிகமாக இருக்கும்; மாறாக, ஒரு நேரத்தில் தேவை குறைவாகவும் அளிப்பு அதிகமாகவும் இருந்தால் சந்தை விலை குறைவாக இருக்கும்.
சந்தை பாகுபாடு (market segmentation)
ஒரு பொருளின் சந்தையைப் பல பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒரே பொருள் பல விலைகளில் விற்கப்படும். இடத்துக்கு ஏற்றவாறு விலை மாறுபடும். வெங்காயம் ஒரே தரத்தில் இருந்தாலும், பணக்காரர்கள் வாழுகின்ற இடத்தில் அதிக விலையிலும் மற்ற இடங்களில் குறைந்த விலையிலும் விற்பதை பார்த்திருப்பீர்கள். அதேபோல், ஒரு சோப்பு நிறுவனம் பல விலைகளில் சோப்களை விற்பதையும் கவனித்திருப்பீர்கள்.
இவையெல்லாம் சந்தை பாகுபாட்டின் அம்சங்கள். ஒரு பொருளுக்கு எத்தனை விதமான வாடிக்கையாளர்கள் உள்ளனரோ அதனை விதமான சந்தை பாகுபாடுகள் இருக்கும். ஒரு பொருளின் தரத்தைச் சிறிதளவு மாற்றி ஒவ்வொரு சந்தையிலும் வெவ்வேறு பொருட்களாக அது விற்பனை செய்யப்படும்.