ஜன்தன் திட்டம்: வங்கித் தலைவர்களுடன் நவ.5-ல் நிதிச் செயலர் ஆலோசனை
பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான அனைவருக்கும் வங்கிச் சேவை அளிக்கும் (ஜன்தன்) திட்டத்தை பொதுத்துறை வங்கிகள் எந்த அளவுக்கு செயல்படுத்தியுள்ளன என்பது குறித்து மத்திய நிதி அமைச்சகம் ஆலோசனை நடத்த உள்ளது.
இதற்காக அனைத்து பொதுத் துறை வங்கித் தலைவர்களையும் இம்மாதம் 5-ம் தேதி நிதித் துறையின் சேவை பிரிவுச் செயலர் ஜி.எஸ். சாந்து சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் பிஎஸ்என்எல், தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, தேசிய தகவல் மையம் (என்ஐசி), ரிசர்வ் வங்கி, ஐபிஏ மற்றும் நபார்டு வங்கியின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
அக்டோபர் 22-ம் தேதி நிலவரப்படி இதுவரை 6.47 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ. 4,813 கோடி தொகை சேமிப்பாக திரட்டப் பட்டுள்ளது. ஜனவரி 26-ம் தேதிக்குள் 7.5 கோடி கணக்குகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜன்தன் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
வங்கிச் சேவை அனை வருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த கணக்கைத் தொடங்குவோருக்கு ரூ.5 ஆயிரம் ஓவர் டிராப்ட் வசதி அளிக்கப்படும். இதன் மூலம் சிறுவணிகக் கடனாக இத்தொகையைப் பெற்று பலனடையமுடியும். பணத்தை எடுக்க `ரூ பே டெபிட் கார்டு’ வழங்கப்படும். அத்துடன் ரூ. 1 லட்சம் விபத்து காப்பீடு மற்றும் ரூ. 30 ஆயிரத்துக்கான ஆயுள் காப்பீடும் வழங்கப்படுகிறது.
