Last Updated : 12 May, 2017 09:58 AM

 

Published : 12 May 2017 09:58 AM
Last Updated : 12 May 2017 09:58 AM

வேலை வாய்ப்பு உருவாக்கும் முதலீடுகளை அரசு கண்காணிக்க முடிவு: நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேப்ராய் தகவல்

குறிப்பிட்ட முதலீடுகள் மூலம் எத்தனை வேலை வாய்ப்புகள் உருவாகின்றன என்பதைக் கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வேலை உருவாக்கம் குறித்த முறையான தகவல் விவரம் இல்லாததால் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேப்ராய் கூறினார்.

பொதுவாக அதிக அளவிலான வேலை வாய்ப்புகளை சேவைத் துறைதான் வழங்குகின்றன. ஆனால் உற்பத்தித் துறை அளிப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது, ஆனால் உண்மை அதுவல்ல என்றார்.

வேலை வாய்ப்புகளை உருவாக்க பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதேபோல எந்த துறையில் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை கண்காணிக்கவும், எந்த முதலீடுகள் அதிக வேலை வாய்ப்புகளை அளிக்கின்றன என்பது குறித்த விவரமான தகவல் தொகுப்பு இல்லை என்று கூறினார்.

இந்திய தொழில் வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பான ஃபிக்கி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறியதாவது: சில திட்டப் பணிகள் குறித்து ஆராய்ந்த போது அவை எந்த அளவுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன, அதிலும் குறிப்பாக முறைசார் தொழில்களான ஜவுளி மற்றும் மருந்து துறைகளில் உருவான வேலை வாய்ப்புகள் குறித்த விவரம் சேகரிக்கப்படுகின்றன.

இந்தியாவில் வேலை வாய்ப்பு, வேலை உருவாக்கம் உள்ளிட்டவை குறித்த நம்பகமான விவரங்கள் இல்லை. இதனால் கொள்கை வகுப்பதில் அரசுக்கு மிகப் பெரும் பிரச்சினை ஏற்படுகிறது. எந்தத் துறையில் கவனம் செலுத்தலாம், அது எந்த சந்தர்ப்பங்களில் எந்த அளவுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் என்பது குறித்த விவரம் அறிவது சிரமமமாக உள்ளது.

தொழிலாளர் துறை மற்றும் சில தனியார் நிறுவனங்கள் வெளியிடும் தகவல்கள் குறிப்பிட்ட சில துறைகள் மற்றும் சில பகுதிகளை மட்டுமே சார்ந்துள்ளதாக அமைந்துள்ளது என்றார்.

சேவைத் துறையில் மட்டுமே வேலை வாய்ப்பு அதிக அளவில் உருவாகிறது என்று குறிப்பிட்டார். வேளாண் துறையில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட போதிலும் மத்திய அரசின் பதிவேட்டில் அது சேவைத் துறை வேலையாகவே பதிவாகியுள்ளது என்றார்.

போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஆகியனவும் சேவைத் துறையின் கீழ் வருகின்றன. இதனாலேயே இத்துறையில் அதிக அளவிலான வேலை உருவாக்கம் உள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார். தொழில் நிறுவனங்களுக்கு தேவையான திறமை படைத்தவர்களை வேலை வாய்ப்பு பயிற்சி மையங்கள் அளிப்பதில்லை. இந்த விஷயத்தில் மிகப் பெரிய இடைவெளி நிலவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வேலை வாய்ப்பு வெற்றிடம் குறித்த தகவலை அறிய நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் ஒரு குழுவை சமீபத்தில் மத்திய அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x