தீர்ந்துவிட்டதா மணல் தட்டுப்பாடு?

தீர்ந்துவிட்டதா மணல் தட்டுப்பாடு?
Updated on
1 min read

வீடு கட்ட முக்கியக் கட்டுமானப் பொருளான மணல், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. சென்னையில் 7 ஆயிரம் கோடி கட்டுமானப் பணிகள் உள்படத் தமிழகம் முழுவதும் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்புள்ள கட்டுமானப் பணிகள் முடங்கின. இத்தொழிலை நம்பியுள்ள 20 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிப்புக்குள்ளாயினர். அரசு எடுத்த நடவடிக்கை காரணமாகக் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் குவாரிகள் திறக்கப்பட்டன. இப்போது மணல் தட்டுப்பாடு தீர்ந்து விட்டதா? மணல் விலை கட்டுக்குள் இருக்கிறதா?

அரசு தற்போது குவாரிகளைத் திறந்துள்ளதால் மணல் தட்டுப்பாடு ஓரளவு தீர்ந்திருப்பதாகக் கூறுகின்றனர் கட்டுநர்கள். ஆனால், விலை அதிகமாக இருப்பதாகப் புகார் கூறுகின்றனர். நவம்பர் மத்தியில் ரூ.35 - 40 ஆக விற்கப்பட்ட ஒரு கன அடி மணல், டிசம்பர் மத்தியில் ரூ.80 - 100 ஆக விற்பனையானது. குவாரி திறக்கப்பட்ட பிறகும் ஏறிய மணல் விலை குறைய வில்லை என்கின்றனர் கட்டு நர்கள்.

‘‘ஒரு லாரி லோடு மணல் தற்போது ரூ.40 ஆயிரமாக விற்கப்படுகிறது. ஒரு கன அடி ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்க்காடு உள்ளிட்ட இடங்களில் மணல் குவாரிகள் திறக்கப்பட்ட பிறகு மணல் தட்டுப்பாடு சற்று நீங்கியுள்ளது. ஆனாலும் ஒரு லாரி மணல் லோடு வாங்கவே நான்கைந்து நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’’என்கிறார் சென்னைப் புறநகர் கட்டுநர் சங்கச் செயலாளர் பிரான்சிஸ் பிரிட்டோ.

மணல் தட்டுப்பாடு காரணமாகச் சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மாதங்களுக்குக் கட்டுமானப் பணிகளை நிறுத்தப்பட்டதால் தை மாதத்திற்குள் கட்டி முடிக்க வேண்டிய வீடுகளைக் கட்ட முடியாதச் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கட்டுநர்கள் கூறுகின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் தை மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்வது தள்ளிப் போகும் நிலை ஏற்படலாம் என்றும் கூறுகிறார்கள் அவர்கள்.

‘‘மணல் தட்டுப்பாடு பிரச்சினை முழுவதும் தீர்ந்து விட்டது என்று கூறமுடியாது. படிப்படியாகத்தான் தீரும். கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால் வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஏராளமான கட்டுமானத் தொழிலாளர்களை இப்போதுதான் திரும்ப அழைக்கத் தொடங்கியுள்ளோம். அவர்கள் திரும்பி வந்தாலும், பொங்கலுக்காக 15 நாட்கள் விடுப்பு எடுத்து விட்டுச் சென்று விடுவார்கள். மொத்தத்தில் பொங்கல் திருநாளுக்குப் பிறகே கட்டுமானத் தொழில் சீரடையும்’’ என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் பிரான்சிஸ் பிரிட்டோ.

அரசு தற்போது குவாரிகளைத் திறந்துள்ளதால் மணல் தட்டுப்பாடு ஓரளவு தீர்ந்துள்ளது. ஆனால், விலை அதிகமாக இருப்பதாகப் புகார் கூறுகின்றனர் கட்டுநர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in