

தனியார் நிறுவனத்தில் முறைகேடு செய்த வழக்கில் வீடியோகான் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வேணுகோபால் தூத் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிந்து விசாரணை செய்யுமாறு காவல்துறைக்கு டெல்லி பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1995-ம் ஆண்டு திருப்பதி செராமிக்ஸ் நிறுவனத்தின் 30 லட்சம் பங்குகள் வீடியோகான் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. ஆனால் இந்த பங்குகளை விற்கும் பொழுது திருப்பதி செராமிக்ஸ் நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின்படி இந்த பங்குகள் விற்கப்பட்டன.
1995-ம் ஆண்டிலிருந்து வீடியோகான் நிறுவனம் இந்த பங்குகளை விற்கவில்லை மாறாக இந்தப் பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிட்டன.
2013-ம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனம் இந்த பங்குகளை 90 லட்ச ரூபாய்க்கு வாங்க விருப்பம் கோரியது. ஆனால் இதுபற்றி மிக தாமதமாகவே திருப்பதி செராமிக்ஸ் நிறுவனத்திற்கு வீடியோகான் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 60 லட்ச ரூபாயை செக்யூரிட்டி டெபாசிட்டாகவும் வீடியோகான் நிறுவனம் பெற்றுக்கொண்டது.
ஒப்பந்தத்தை மீறி வீடியோகான் நிறுவனம் மூன்றாவது நபருக்கு பங்குகளை விற்றதாக திருப்பதி செராமிக்ஸ் நிறுவனத்தின் ராம் ராஜ் பண்டாரி புகார் செய்தார்.
இது தொடர்பான வழக்கு நேற்று டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சோனு அக்னிஹோத்ரி, திருப்பதி செராமிக்ஸ் நிறுவனத்தின் பங்குகளை முறைகேடாக விற்பனை செய்த வேணுகோபால் தூத் மீது ஐபிசி 420ன் படி ஏன் எப்ஐஆர் பதிவுசெய்யப்படவில்லை என்று டெல்லி காவல்துறை பொருளா தார குற்றப்பிரிவு அமைப்பான எஸ்ஹெச்ஓ-விடம் கேள்வி எழுப்பினார்.
பின்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வேணுகோபால் தூட் மீது வழக்கு தொடர்வதற்கான் அடிப்படை ஆதாரங்கள் இருப்பதால் அவர் மீது ஐபிசி பிரிவு 420-ன் கீழ் எப்ஐஆர் விசாரிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு உத்தரவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.