

முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கண்ணாடியிழை கேபிள் (ஃபைபர் ஆப்டிக்) வசதியை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும். கண்ணாடியிழைக் கேபிளை குத்தகைக்கு விடுவதன் மூலம் அனில் அம்பானி நிறுவனத்துக்கு ரூ. 5 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும்.
நாடு முழுவதும் நான்காம் தலைமுறை (4-ஜி) செல்போன் சேவையை அளிக்கும் லைசென்ஸை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
இரு நிறுவனங்களிடையே மேற்கொள்ளப்படும் மூன்றாவது ஒப்பந்தம் இதுவாகும். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் நகரங்களை இணைக்கும் கண்ணாடியிழைக் கேபிள் வசதி 300 நகரங்களிடையே சுமார் 5 லட்சம் கிலோமீட்டர் அளவுக்குப் போடப்பட்டுள்ளது.