

பரஸ்பர நிதித் திட்டங்களை விற்பனை செய்வதில் பொதுத்துறை வங்கிகள் முக்கிய பங்காற்ற முடியும் என்று பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) தெரிவித்துள்ளது. வங்கிகள் மூலமாக காப்பீட்டுத் திட்டங்களை காப்பீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் விற்பனை செய்துள்ளன. இதே பாணியில் பரஸ்பர நிதித் திட்டங்களையும் விற்பனை செய்ய முடியும் என்று செபி கருத்து தெரிவித்துள்ளது.
பரஸ்பர நிதித் திட்டங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் முதலீடு செய்வதற்கும், இந்த நிதித் திட்டங்களின் விற்பனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் வங்கி மூலமான விற்பனையே சிறந்த வழி என்று செபி தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கிளைகளைக் கொண்டுள்ளன. இதனால் மிக எளிதாக அனைத்துத் தரப்பினரிடமும் பரஸ்பர நிதித் திட்டங்களை கொண்டு சேர்க்க முடியும் என்று செபி தெரிவித்துள்ளது.
நீண்ட கால பரஸ்பர நிதித் திட்டங்கள் மற்றும் அதில் கிடைக்கும் வருமான வரிச் சலுகை உள்ளிட்ட விஷயங்களை பெருமளவிலான மக்களுக்கு எடுத்துச் செல்வதற்கு வங்கியே சிறந்த வழியாக இருக்கும் என்றும் செபி கருத்து தெரிவித்துள்ளது. வங்கிகள் மூலமாக பரஸ்பர நிதித் திட்டங்களை விற்பனை செய்வதற்கு செபி இயக்குநர் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. விரைவிலேயே இது அறிவிக்கையாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் செபி நடத்திய ஆய்வில் வங்கிகளின் திறமை குறைந்த அளவிலேயே பயன்படுத் தப்படுவதாகக் கண்டறிந்துள்ளது. பரஸ்பர நிதி திட்டங்களை நிர்வகிக்கும் ஏஎம்சி நிறுவனங்கள் வங்கி மூலமாக இத்திட்டங்களை விற்பனை செய்யும் வாய்ப்புகளைக் கண்டறியுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. 45 பரஸ்பர நிதி நிறுவனங்கள் மொத்தம் ரூ. 9 லட்சம் கோடியை நிர்வகிக்கின்றன. இந்தியாவில் 60 மாவட்டங்களில் மட்டுமே பரஸ்பர நிதித் திட்டங்கள் பிரபலமாக உள்ளன.