Published : 21 Nov 2013 12:00 AM
Last Updated : 21 Nov 2013 12:00 AM

நேரடி வரி விதிப்பு மசோதா: குளிர்காலத் தொடரில் அறிமுகம்?

நேரடி வரிவிதிப்பு நெறிமுறை (டிடிசி) மசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத் தொடருக்குள் கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் தீவிரமாக உள்ளது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 5-ம் தேதி ஆரம்பமாகிறது. அப்போது டிடிசி அமல்படுத்துவதற்கான மசோதா தாக்கலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடி வரிவிதிப்பு நெறிமுறைகளை (டிடிசி) உருவாக்கும் பணியில் தீவிரமாக உள்ளோம். இந்த மசோதாவை வெகு விரைவில் கொண்டு வருவதில் உறுதியாக உள்ளோம் என்று வருவாய்த்துறை செயலர் சுமித் போஸ் தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு(சி.ஐ.ஐ.) மாநாட்டில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

இந்த மசோதா குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதில் அரசு தீவிரமாக உள்ளது. டிடிசி-யில் மிக முக்கியமான திருத்தமாக வருமான வரியில் அதிகபட்ச வரம்பாக 35 சதவீதத்தை நிர்ணயிக்கும் பரிந்துரை இடம்பெற்றுள்ளது.

ஆண்டு வருமானம் ரூ. 10 கோடிக்கு மேல் ஈட்டுவோருக்கு 35 சதவீத வருமான வரியாக விதிக்கப்படும். இதேபோல டிவிடெண்ட் வருமானம் ரூ. 1 கோடிக்கு மேல் பெறுவோர் ஆண்டுக்கு 10 சதவீத தொகையை வரியாக செலுத்த வேண்டும் என்றும் டிடிசி பரிந்துரைத்துள்ளது.

இது தவிர குறைந்தபட்ச மாற்று வரி (எம்ஏடி) லாபத்தின் மீது விதிப்பது என்றும் ஒட்டு மொத்த சொத்தின் மீது அல்ல என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பங்கு பரிவர்த்தனை வரி (எஸ்ஐடி) தொடர்ந்து நீடிக்கும். இந்த மசோதாவை பரிசீலனை செய்யும் நிதித்துறைக்கான நிலைக்குழு லெவி எனப்படும் கூடுதல் வரி விதிப்பைக் கைவிட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

வருமான வரியானது ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதமும், ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் உள்ளவர்களுக்கு 20 சதவீதமும், ரூ. 10 லட்சத்துக்கு மேல் பெறுபவர்களுக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. இது தவிர, ரூ. 1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கு கூடுதல் வரியாக (சர் சார்ஜ்) 10 சதவீதம் விதிக்கப்படுகிறது.

நிலைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. அதேசயம் நிறுவன வரி விதிப்பு குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றே தோன்றுகிறது.

டிடிசி கொண்டு வருவதன் முக்கிய நோக்கமே வரி விதிப்பு முறையை சீரமைப்பதும் வருமான வரிச் சட்டம் 1961 முறையை மாற்றியமைப்பதுமேயாகும். டிடிசி 2010-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நிறுவனங்களுக்கான வரி விதிப்பு தொடர்ந்து 30 சதவீதம் என்ற நிலையிலேயே இருக்கும். இதையே நிலைக்குழுவும் பரிந்துரை செய்துள்ளது.

டிடிசி வரைவு மசோதா முதல் முறையாக 2009-ம் ஆண்டு நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் வருமான வரி வரம்பு ரூ. 1.6 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை 10 சதவீதமும், ரூ. 10 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரை 20 சதவீதமும், ரூ. 25 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படும் என பரிந்துரைக்கப்பட்டது. அத்துடன் நிறுவன வரி 25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதில் சில மாறுதல்களுடன் டிடிசி மசோதா முன்னாள் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியால் 2010-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை 10 சதவீதமும், .ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை 20 சதவீதமும், ரூ. 10 லட்சத்துக்கு மேல் 30 சதவீதமும், நிறுவன வரி 30 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற நிலைக்குழு வருமான வரி வரம்பு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலும் முதல் பிரிவாகவும், ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை இரண்டாவது பிரிவாகவும் ரூ. 20 லட்சத்துக்கு மேல் மூன்றாவது பிரிவாகவும் பரிந்துரை செய்திருந்தது. நிறுவன வரி விதிப்பு 30 சதவீதமாகத் தொடரலாம் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x