

ஜப்பான் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட சரிவைச் சந்தித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக வளர்ச்சி விகிதம் 1.6 சதவீதமாக இருந்தது. ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் வளர்ச்சி விகிதம் 2.1 சதவீத அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சரிவைச் சந்தித்துள்ளது பொருளாதார வல்லுநர்களை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகத் திகழும் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி சரிவைச் சந்தித்துள்ளதால் பொருளாதார தேக்க நிலை உருவாகலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்த கடுமையான நிலநடுக்கம் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரழிவு ஆகியவற்றிலிருந்து இன்னமும் அந்நாடு முழுமையாக மீளவில்லை என்பதையே பொருளாதார குறியீடுகள் காட்டுகின்றன.
2015-ம் ஆண்டில் விற்பனை வரியை உயர்த்துவது தொடர்பாக மக்களின் கருத்தைக் கேட்டறிய அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே திட்டமிட்டிருந்தார். அந்த நடவடிக்கையும் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது. ஜப்பானின் கடன் சுமையைக் குறைப்பதற்காக வரியை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. வளர்ச்சியடைந்த நாடுகளில் மிக அதிக அளவிலான கடன் சுமை உள்ள நாடாக ஜப்பான் திகழ்கிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 5 சதவீதமாக இருந்த விற்பனை வரி 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. இரண்டாம் காலாண்டிலும் இதன் தாக்கம் வெளிப்பட்டு தற்போது பொருளாதார தேக்க நிலை ஏற்படும் அளவுக்கு சூழ்நிலை உருவாகியுள்ளது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் பொருளாதார வளர்ச்சி 0.4 சதவீதம் குறைந் துள்ளது. தனியார் நுகர்வு பெருமளவு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனியார் நுகர்வு 60 சதவீத பங்களிப்பைப் பெறுகிறது.
தேர்தலுக்கு வாய்ப்பா?
ஜப்பான் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துள்ள நிலையில் பிரதமர் ஷின்சோ அபே, மக்களிடம் தனக்குள்ள செல்வாக்கை நிரூபிக்க தேர்தலை நடத்தலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தேர்தல் குறித்த அறிவிப்பை பிரதமர் செவ்வாய்க் கிழமை வெளியிடலாம் என ஜப்பான் ஊடகங்கள் தெரிவிக் கின்றன. டிசம்பர் 14-ம் தேதி தேர்தல் நடத்தப்படலாம் எனவும் செய்தி வெளியிட்டுள்ளன.
2012-ம் ஆண்டிலிருந்து பிரமதர் அபே-யின் செல்வாக்கு சரிந்து வந்தாலும் உடனடியாக தேர்தல் நடத்தப்பட்டால் அது அபே-வுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் சிதறுண்டு இருப்பதே இதற்குக் காரணம் என்று கூறுகின்றனர். முன்கூட்டியே தேர்தல் நடத்தி வெற்றி பெறுவதன் மூலம் அடுத்த ஆண்டு தான் மேற்கொள்ள உள்ள அணு உலைகளை மீண்டும் இயக்கச் செய்வது உள்ளிட்ட மக்களிடையே பிரபலமில்லாத திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று அபே நம்புவதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் அபே-யின் கணிப்பு தவறானது எப்படி?
கடந்த ஆண்டு பிரதமர் ஷின்சோ அபே ஒரு பொருளாதார உத்தியைக் கொண்டு வந்தார். இது அபேஎகனாமிக்ஸ் (அபே-யின் பொருளாதார கொள்கை) என்றழைக்கப்பட்டது. அடுத்த 20 ஆண்டுகளில் ஜப்பானின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து அதை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வருவதாகும். ஊக்க நடவடிக்கையாக பல்லாயிரம் கோடி டாலர்களை செலவிட முடிவு செய்யப்பட்டது. ஜப்பானின் மத்திய வங்கி மேலும் தாராளமாக கரன்சிகளை அச்சிட்டது. பல்லாயிரம் கோடி மதிப்புக்கு கரன்சியை அச்சிட்டு அரசு பத்திரங்களை வாங்கியது.
இதற்கு இரட்டை விளைவுகள் உண்டு. முதலாவதாக அதிக அளவில் கரன்சிகள் அடிக்கப்பட்டதால் யென் மதிப்பு வீழ்ந்தது. இரண்டாவதாக முதலீட்டாளர்கள் பங்கு பத்திரங்களில் முதலீடு செய்வதற்குப் பதில் பங்குச் சந்தைக்குத் திரும்பினர். இதனால் பங்குச் சந்தை எழுச்சி பெற்றது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அபே-யின் அரசு திட்டமிட்ட வகையில் சில நடவடிக்கைகளை எடுத்தது. பொருளாதாரம் வளரும் போது வரி விதிப்பை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அள வாக முதல் முறையாக வரி விதிக்கப்பட்டது. நுகர்வோர் வரி 5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஜப்பானின் பொது நிதியில் நிலவும் பெரும் பற்றாக்குறையை இட்டு நிரப்ப இத்தகைய வரி விதிப்பு அவசியம் என்று கருதப்பட்டது.
ஆனால் அரசின் இந்த உத்தி எதிர்பார்த்த பலனை அளிக்க வில்லை. ஜப்பான் நுகர்வோர் செலவிடுவதை நிறுத்தினர். இதனால் பொருளாதாரம் மீண்டும் தேக்க நிலையை நோக்கி நகரத் தொடங்கியது. பங்குச் சந்தையில் ஏற்பட்ட மிகப் பெரும் எழுச்சியால் வெகு சில பணக்காரர்களே பலனடைந்தனர். ஜப்பான் மக்கள் தொகையில் 80 சதவீதம் பேரிடம் ஒரு பங்கு கூட கிடையாது. தங்களுடைய வருமானம் அதிகரிக்காத நிலையில் வரி அதிகரிக்கப்பட்டதால் ஏழை மக்களின் வாங்கும் சக்தி குறைந்து அவர்கள் மேலும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் மக்கள் செலவைக் கட்டுப்படுத்தத் தொடங்கினர்.