

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சர்க்கரைக்கு 25 சதவீத வரி விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. உள்நாட்டில் சர்க்கரை விலையைக் கட்டுக்குள் வைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்படுவதாக மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் நேற்று தெரிவித்துள்ளார்.
சர்க்கரை உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. முக்கிய விளைச்சல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக இந்த ஆண்டு உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் விலை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைபோல உயர்ந்துள்ளது.
உள்நாட்டு சந்தையின் விலையை கட்டுக்குள் வைக்கவும், இந்திய நுகர்வு தேவையை ஒழுங்குபடுத்தவும் ஏற்றுமதி சர்க்கரைக்கு கூடுதல் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பஸ்வான் கூறினார். சர்வதேச சந்தையில் சர்க்கரையின் விலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக லாபமீட்ட வர்த்தகர்கள் ஆர்வம் காட்டுவர். இதைக் கட்டுப்படுத்த வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வர்த்தகர்கள் இந்த புதிய வரி விதிப்பு மூலம் சர்வதேச சந்தையில் விலை மேலும் அதிகரிக்க வழி வகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
சர்வதேச சந்தையில் இந்திய சர்க்கரையின் பங்களிப்பு வெறும் 5.3 சதவீதம்தான். இந்தியாவிலிருந்து சர்க்கரை வரத்து குறையும்போது இது ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கோடக் கமாடிட்டிஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு துணைத் தலைவர் அரவிந்த பிரசாத் கூறியுள்ளார்.
அமெரிக்க விவசாயத்துறை புள்ளி விவரங்களின்படி, இந்தியாவிலிருந்து 2015-16 ஆண்டில் 29 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
வரி விதிப்பால் இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் சர்க்கரை 10 லட்சம் டன்னாகக் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2009-10 ஆண்டுகளுக்கு பிறகு சர்க்கரை ஏற்றுமதியில் இது மிகப்பெரிய சரிவு என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.