

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஐடி ஏற்றுமதி 7 சதவீதம் முதல் 8 சதவீதமாக இருக்கும் என ஐடி நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் கணித்திருக்கிறது. அதே சமயத்தில் உள்நாட்டில் இத் துறையின் வளர்ச்சி 10 சதவீதம் முதல் 11 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதி ஆண்டில் ஐடி துறை 1.70 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தது. நடப்பு நிதி ஆண்டில் 1.30 முதல் 1.50 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் என்றும் நாஸ்காம் தெரிவித்திருக்கிறது.
சர்வதேச அளவிலான ஐடி துறையில் இந்தியாவின் பங்கு நிலையாக மட்டுமல்லாமல் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது என நாஸ்காம் தலைவர் சந்திரசேகர் தெரிவித்தார். வெளிநாடுகளில் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் இருப்பதால் முடிவெடுப்பது தாமதமாகி இருக்கிறது. இதனால் கடந்த ஆண்டு ஐடி துறையின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. ஆனால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என சந்திரசேகர் கூறினார்.
துறை சார்ந்த கணிப்புகளை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் நாஸ்காம் வெளியிடும். சர்வதேச அளவில் நிச்சயமற்ற சூழல் இருப்பதால் ஐடி துறை குறித்த கணிப்பை முதல் முறை
யாக நாஸ்காம் இந்த ஆண்டு தள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.