

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு கடன் வழங்குவதற்கு முன்பு ஐடிபிஐ வங்கித் தலைவர் விடுமுறை நாள் ஒன்றில் விஜய் மல்லையாவை சந்தித்தாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் கடன் வாங்கிய தொகையை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்று அங்கு வசித்து வருகிறார். வங்கிகள் கடன் வழங்கியது குறித்த விசாரணைகள் நடந்து வருகிறது. இந்த நிலைமையில், விஜய் மல்லையாவுக்கு போலி ஆவணங்கள் மூலம் விதிகளை மீறி கடன் வழங்கியது தொடர்பாக ஐடிபிஐ வங்கி முன்னாள் தலைவர் யோகேஷ் அகர்வால், கிங்க்பிஷர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி ஏ. ரகுநாதன் உள்ளிட்ட 8 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இரு கட்டங்களாக விஜய் மல்லையாவுக்கு ரூ. 350 கோடி கடனை ஐடிபிஐ வங்கி வழங்கியிருக்கிறது. ஆனால் இந்த கடன் வழங்குவதற்கு முன் விடுமுறை நாளின் போது விஜய் மல்லையாவும் ஐடிபிஐ வங்கித் தலைவரும் சந்தித்துள்ளார்கள். கிங்க்பிஷர் நிறுவனம் பலவீனமான நிதி நிலைமையில் இருந்த போது இந்த கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அதாவது விடுமுறை நாள் ஒன்றில் விஜய் மல்லையாவை சந்தித்துவந்த பிறகு உடனடியாக 2009-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ரூ.150 கோடி கடன் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு ரூ. 200 கோடி ரூபாய் கடன் 2009-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி வழங்கப்பட்டிருக்கிறது. என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் விஜய் மல்லையாவிடம் இருந்து அழைப்பு வந்ததாகவும் அடுத்த நாளே பார்க்கமுடியுமா என்று கேட்டாதாகவும் ஐடிபிஐ வங்கித் தலைவர் யோகேஷ் அகர்வால் அமலாக்கத்துறையிடம் கொடுத்த அறிக்கையில் கூறியிருக்கிறார். அடுத்த நாள் விடுமுறை நாள். மேலும் விஜய் மல்லையா அடுத்த நாள் மும்பையிலிருந்து கிளம்ப இருந்ததால் அந்த விடுமுறை நாளில் சந்திக்க ஒப்புக் கொண்டேன். அந்த விடுமுறை நாளில் முன்னாள் வங்கித் தலைவர், தற்போதைய ஆலோசகர் மற்றும் செயல் இயக்குநர் ஆகியோருடன் சென்று விஜய் மல்லையாவை சந்தித்தோம். அப்போது கிங்க்பிஷர் நிறுவனம் மிகப் பெரிய நிதிச் சிக்கலில் இருப்பதாகவும் உடனடியாக நிதி தேவைப்படுவதாகவும் விஜய் மல்லையா எங்களிடம் தெரிவித்தார் என்று அமலாக்கத்துறைக்கு வழங்கிய அறிக்கையில் யோகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். வங்கி அதிகாரிகளும் கிங்க்பிஷர் நிறுவனமும் மிகப் பெரிய சதியில் ஈடுபட்டுள்ளனர் என்று அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
ஐடிபிஐ வங்கி மட்டும் ரூ860.92 கோடி அளவுக்கு கடன் வழங்கியுள்ளது.