

பொருளாதார தேக்க நிலை காரணமாக கார் விற்பனையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. சில நிறுவனங்களின் கார் விற்பனை செப்டம்பர் மாதம் அதிகரித்தும். சில நிறுவனங்களின் விற்பனை சரிவைச் சந்தித்தும் காணப்பட்டன.அதேசமயம் மோட்டார் சைக்கிள் விற்பனை அதிகரித்துள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம், ஃபோர்டு மற்றும் டொயோடா தவிர பிற நிறுவனங்கள் விற்பனை சரிந்துள்ளது.
இந்தியாவில் அதிக அளவில் கார்களை உற்பத்தி செய்யும் மாருதி சுஸுகி நிறுவன கார் விற்பனை செப்டம்பரில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் இந்நிறுவனம் 1,04,964 கார்களை விற்பனை செய்துள்ளது. இதே காலகட்டத்தில் ஏற்றுமதி 180 சதவதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 14,565 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
டொயோடா: செப்டம்பர் மாதத்தில் இந்நிறுவன கார்களின் விற்பனை 10.52 சதவீதம் அதிகரித்து 15,795-ஐ தொட்டுள்ளது. 3,780 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
ஃபோர்டு: சென்னையில் மறைமலைநகரில் ஆலை அமைத்து செயல்பட்டு வரும் ஃபோர்டு நிறுவன கார் விற்பனை செப்டம்பரில் 51 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 14,217 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் எகோஸ்போர்ட் அறிமுகமும் விற்பனை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.
ஹூன்டாய்: கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூன்டாய் கார் விற்பனை கடந்த மாதம் 4 சதவீதம் சரிந்துள்ளது. மொத்தம் 51,418 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதேபோல ஏற்றுமதியும் கணிசமாக சரிந்துள்ளது. மொத்தம் 20,817 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஏற்றுமதியானதைவிட 8 சதவீதம் குறைவாகும்.
மஹிந்திரா: இந்நிறுவன கார்களின் விற்பனை கடந்த மாதம் 10 சதவீதம் சரிந்தது. செப்டம்பரில் மொத்தம் 48,342 கார்களை மட்டுமே இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ்: இந்நிறுவன கார்களின் விற்பனை செப்டம்பர் மாதம் 4.79 சதவீதம் சரிந்துள்ளது. மொத்தம் 7,048 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. பீட், , என்ஜாய் என இந்நிறுவனத் தயாரிப்புகள் அனைத்தும் சேர்த்து விற்பனை இதுவாகும்.
சுஸுகி மோட்டார் சைக்கிள்: ஜப்பானின் சுஸுகி மோட்டார் சைக்கிள் விற்பனை 9 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத் தயாரிப்புகள் கடந்த மாதம் 41,734 விற்பனையாயின. இதனால் புதியாக மோட்டார் சைக்கிள் வாங்குவோரைக் கருத்தில் கொண்டு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஹோண்டா மோட்டோகார்ப்: ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவன விற்பனை 35 சதவீதம் அதிகரித்து 3,28,965 என்ற நிலையை எட்டியது. இந்நிறுவன ஸ்கூட்டர்கள் விற்பன 28 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 1,63,229 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன.
மஹிந்திரா: மஹிந்திரா நிறுவனத் தயாரிப்புகள் விற்பனை 136 சதவீதம் அதிகரித்து 20,890 என்ற நிலையை எட்டியுள்ளன. இந்நிறுவனத்தின் புதிய அறிமுகமான சென்ட்ரியோவை வாங்க இன்னமும் 50 ஆயிரம் முன்பதிவுகள் உள்ளன.
நிசான் விலை உயர்வு: இதனிடையே தனது கார்களின் விலையை 1.4 சதம் முதல் 2.9 சதவீதம் வரை உயர்த்த நிசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சன்னி, மைக்ரா, மைக்ரா ஆக்டிவ் ஆகிய அனைத்து ரகக் கார்களின் விலையும் அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து விலை உயர்த்தப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.