

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை அவ்வங்கி வியாழக்கிழமை வெளியிட்டது.
திருத்தப்பட்ட வட்டி விகிதத்தின்படி பொதுவான வீட்டுக் கடனுக்கு 0.4 சதவீதமும், பெண்களுக்குக் கூடுதலாக 0.5 சதவீத சலுகை வட்டியையும் வங்கி அறிவித்துள்ளது.
ரூ. 75 லட்சத்துக்குக் குறைவான வீட்டுக் கடனுக்கு 10.15 சதவீத வட்டியும், இதில் பெண்களுக்கு 10.10 சதவிகித வட்டியும் வசூலிக்கப்படும். ரூ. 75 லட்சத்துக்கு மேலான வீட்டுக் கடனுக்கு 10.30 சதவிகித வட்டியும், பெண்களுக்கு 10.25 சதவீத வட்டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட புதிய வட்டி விகிதத்தின் படி 30 ஆண்டுகளுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு செலுத்த வேண்டிய மாதத்தவணைத் தொகை பெண்களுக்கு ரூ.885 ஆக இருக்கும். மற்றவர்களுக்கு இது ரூ. 889 ஆக இருக்கும்.
முன்பு இருந்த வட்டி விகிதத்தின் படி ஒரு லட்ச ரூபாய்க்கு 30 ஆண்டுகளுக்கு மாதம் ரூ 900 ஆக இருக்கும்.
கடந்த அக்டோபர் மாதத்தில் நுகர்வோர் பொருட்களுக்கான கடன் வட்டி விகிதத்தை காருக்கான வட்டி விகிதத்தை எஸ்.பி.ஐ. குறைத்தது. அத்துடன் பரிசீலனை கட்டணத்தையும் குறைத்தது.