

பாங்க் ஆப் இந்தியா லாபம் ரூ. 786 கோடி
பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியா (பிஓஐ) செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் ரூ. 786 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபத்தை விட 26 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ரூ. 621 கோடி லாபம் ஈட்டியிருந்தது.
வட்டி மூலமான வருவாய் ரூ. 11,093 கோடியாகும். முந்தைய ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டில் வட்டி வருமானம் ரூ. 9,239 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக் கடன் 3.54 சதவீதமாகும். முந்தைய ஆண்டு இது 2.93 சதவீதமாக இருந்தது. காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ. 10,339 கோடியிலிருந்து ரூ. 12,099 கோடியாக அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் வங்கியின் நிகர வாராக் கடன் 2.32 சதவீதமாக இருந்தது. வாராக் கடனுக்கான ஒதுக்கீடு ரூ. 953 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ரூ. 1,232 கோடியை வாராக் கடனுக்கென ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.வர்த்தகத்தின் முடிவில் வங்கிப் பங்கு விலை 0.4 சதவீதம் உயர்ந்து ரூ. 285.95-க்கு வர்த்தகமானது.
டாபர் லாபம் 15% உயர்வு
டாபர் இந்தியா நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு லாபம் 15 சதவீதம் உயர்ந்து ரூ. 287 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ. 249 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் விற்பனை வருமானம் 10.35 சதவீதம் அதிகரித்து ரூ. 1,924 கோடியாக உயர்ந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 1,743 கோடியாக இருந்தது.
6 மாத காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 498 கோடியாக இருக்கிறது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் லாபம் ரூ. 435 கோடியாக இருந்தது. நிகர விற்பனை ரூ. 3,787 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் ரூ. 3,390 கோடியாக இருந்தது. நுகர்வோர் பொருள் தயாரிப்பு வர்த்தகம் 7.55 சதவீதம் அதிகரித்து ரூ. 1,602 கோடியைத் தொட்டதாகவும், உணவு பொருள் வர்த்தகம் 29 சதவீதம் அதிகரித்து ரூ. 262 கோடியைத் தொட்டதாகவும் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுநீல் துகால் தெரிவித்தார்.