Published : 28 Dec 2013 10:10 AM
Last Updated : 28 Dec 2013 10:10 AM

2028-ஆம் ஆண்டில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் இந்தியா

2028-ம் ஆண்டு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சி.இ.பி.ஆர். கன்சல்டன்ஸி கருத்து தெரிவித்திருக்கிறது. 2028-ம் ஆண்டு ஜப்பானை பின்னுக்கு தள்ளிவிட்டு, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கும் என்று அந்த கன்ஸல்டன்சிநிறுவனம் தெரிவித்திருக்கிறது.

2013-ம் ஆண்டு சி.இ.பி.ஆர். அறிக்கைபடி 11வது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் அதிகம் இருக்கும் இளைஞர்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்தியாவை மூன்றாவது இடத்துக்கு கொண்டு செல்லும் என்று அந்த ஆய்வு நிறுவனம் கருத்து தெரிவித்திருக்கிறது.

2012-ம் ஆண்டின் சர்வதேச நிதி அமைப்பின் கருத்துக்கணிப்பு, நாடுகளின் ஜி.டி.பி. எதிர்பார்ப்பு, நாடுகளின் வளர்ச்சி, பணவீக்கம், அன்னிய செலாவனி பரிமாற்ற தகவல்கள் ஆகியவற்றை வைத்து வோர்ல்ட் எக்கானாமிக் லீக் டேபிள் என்ற பட்டியலை சி.இ.பி.ஆர் அமைப்பு வெளியிடுகிறது.

ஒவ்வொரு வருட இறுதியிலும் அந்த ஆண்டுக்கான பட்டியலை இந்த ஆய்வு நிறுவனம் வெளியிடும். முதல் 30 நாடுகளின் பட்டியல் மட்டும் வெளியிடப்படும். ஆனால் அதே சமயத்தில் அடுத்த 5,10 மற்றும் 15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் 30 இடத்தை பிடிக்கும் நாடுகளின் பட்டியலையும் இந்த நிறுவனம் வெளியிடும்.

அதன் படி 2013-ம் ஆண்டுக்கான இந்த பட்டியலில் இந்தியா 11 வது இடத்தை பிடித்திருக்கிறது. இப்போது இந்தியாவின் ஜி.டி.பி. 1,758 பில்லியன் டாலர்கள் என்ற நிலையில் இருக்கிறது.

2018-ம் ஆண்டு இரண்டு படிகள் முன்னேறி உலகின் 9வது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும் அப்போது இந்தியாவின் ஜி.டி.பி. 2,481 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்றும் அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

2023-ம் ஆண்டு இந்தியாவின் ஜி.டி.பி. 4,124 பில்லியன் டாலர்களாக இருக்கும். அப்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறது.

2028-ம் ஆண்டு இந்தியாவின் ஜி.டி.பி. 6,560 பில்லியன் டாலர் உயர்ந்து அப்போது மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறும் என்று சொல்லி இருக்கிறது.

முதல் 20 பெரிய நாடுகளில் இரண்டு மாற்றங்கள் மட்டுமே 2013-ம் ஆண்டு பட்டியலில் நடந்திருக்கிறது. இத்தாலி நாட்டை பின்னுக்கு தள்ளிவிட்டு ரஷ்யா எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. அதேபோல இந்தியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு பத்தாவது இடத்துக்கு கனடா முன்னேறி இருக்கிறது. முதல் பத்து இடத்தில் இருந்து இந்தியா சரிந்ததற்கு ரூபாய் மதிப்பு சரிந்ததுதான் காரணம் என்று அந்த நிறுவனம் சொல்லி இருக்கிறது.

2018-ம் ஆண்டு பட்டியலில் வளரும் நாடுகளில் இந்த பட்டியலில் நல்ல முன்னேற்றம் காண்பிக்கும். அப்போது ரஷ்யா 6-வது இடத்திலும், இந்தியா 9-வது இடத்திலும், மெக்சிகோ 12-வது இடத்திலும், கொரியா 13-வது இடத்திலும், துருக்கி 17-வது இடத்திலும் இருக்கும்.

2023-ம் ஆண்டு இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் நல்ல ஏற்றம் இருக்கும். அப்போது இந்தியா நான்காவது இடத்திலும், பிரேசில் ஐந்தாவது இடத்தில் இருக்கும்.

2028-ம் ஆண்டு இந்த பட்டியலில் பெரிய மாற்றம் நிகழும். அப்போது அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும், மெக்ஸிகோ 9வது இடத்திலும், கனடா 10 வது இடத்திலும் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x