

அரசின் செலவுகள் வருவாய்க் கணக்கு, முதல் கணக்கு என இரு பிரிவுகள் இருப்பதைப் பார்த்தோம். அதுபோலவே அரசின் செலவுகளும் இரண்டு விதமாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று திட்டச் செலவுகள், மற்றொன்று திட்டம் சாராத செலவுகள்.
நாம் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஒரு ஐந்தாண்டு திட்டத்தை செயல்படுத்துகிறோம். தற்போது 12வது ஐந்தாண்டு திட்டத்தை 2012-13 முதல் 2016-17 வரை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.ஒரு ஐந்தாண்டு திட்டத்தை ஐந்து ஓர் ஆண்டுத் திட்டமாக (Annual Plan) பிரிப்போம்.
ஒவ்வொரு பட்ஜெட்டை உருவாக்கும் போது ஆண்டுத் திட்டமும் உருவாக்கப்படும். ஒர் ஆண்டு திட்டத்தில் (ஆண்டு திட்டம் 2013-14) உள்ள திட்டங்களுக்காகச் செய்யப்படும் செலவுகள் எல்லாம் அந்த ஆண்டு பட்ஜெட்டில் (2013-14 ஆண்டு பட்ஜெட்டில்) திட்டச் செலவுகளாக (plan expenditure) கணக்கு வைக்கப்படும். உதாரணமாக 2013-14இல் ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிப்பது என திட்டமிட்டிருந்தால் அப்பள்ளிக்கான கட்டிடச் செலவுகள் முதல் கணக்கில்(capital account) திட்டச் செலவுகளாகவும், அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பளம் வருவாய் கணக்கில் செலவுகளாகவும் சேர்க்கப்படும்.
பொதுவாக ஐந்தாண்டு/ஆண்டு திட்டங்கள் அரசின் புதிய முயற்சிகளை கொண்டதாக இருக்கும். எனவே, திட்டச் செலவுகள் உயர்ந்தால் அரசின் புதிய முயற்சிகள் உயர்ந்துள்ளதாகக் கூறலாம். ஆண்டு திட்டத்தில் இல்லாத செலவுகள் எல்லாம் திட்டம் சாராத செலவுகள் (non-plan expenditure) என்று குறிப்பிடப்படும்.
இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு ஐந்தாண்டு திட்டத்தில் உருவாக்கப்படும் திட்டம், அதற்குபிறகும் தொடரும் பட்சத்தில் அதற்கான செலவுகள் திட்டம்சாராத செலவுகளாகும். 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் ஒரு பள்ளி உருவாக்கப்படும்போது அதற்கான செலவுகள் திட்டமிட்ட செலவுகளாகும். 2017-ம் ஆண்டுக்கு பிறகும் இந்த பள்ளி செயல்படும்போது அந்த செலவுகள் திட்டம் சாராத செலவுகளாகும். இவையும் வருவாய், முதல் கணக்குகளில் இடம் பெரும்.