Last Updated : 30 Oct, 2014 10:38 AM

 

Published : 30 Oct 2014 10:38 AM
Last Updated : 30 Oct 2014 10:38 AM

தகவல்களால் யாருக்கு ஆதாயம்?

பிக்-டேட்டாவைப் பற்றி படிக்கும் போது அனைவருக்கும் இரண்டு சந்தேகங்கள் வரக்கூடும். தனி மனித டேட்டாக்களை வியாபார நோக்கில் சேகரித்து அதைப் பீராய்ந்து பார்த்து வியாபார நோக்கில் அலசி உபயோகிப்பது என்பது எத்தனை நாள் சாத்தியம்.

உபயோகிப்பாளர்கள் இடையே ஒரு நாள் ஒரு ஹீரோ தோன்றி ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் பேர், இத்தனை டெராபைட் பெர்சனல் டேட்டாவை இலவசமாக தந்துக்கிட்டேயிருந்திருக்கோம். கடந்த பதினைந்து வருஷத்துல ஒவ்வொரு நாளும் 1,826 பெட்டா பைட்ஸ் டேட்டாவை சேகரிச்சுட்டு இருக்காங்க. இந்தக் கொடுமையை உங்ககிட்ட எடுத்துட்டு வந்து சொல்லணுமின்னு முயற்சி பண்ணி பண்ணி முடியல! ஒவ்வொரு நாளும் ஒரு சர்ச் இஞ்சின் மட்டும் கிட்டத்தட்ட இருபது பெட்டா பைட் டேட்டாவை ஒரு நாளைக்கு சேகரிக்குது.

இப்படியே போனா தனிமனித ப்ரைவசி அப்படீங்கிறது நாட்டுல எப்படி இருக்கும் என டயலாக் பேசி எல்லா உபயோகிப்பாளரையும் முழிக்க வைச்சுட்டா என்னவாகிறது. உபயோகிப்பாளர்கள் அனைவரோட கண்ணையும் அந்த ஹீரோ திறந்து விட்டுட்டா டேட்டா கிடைக்காமலே போயிடுமே. அப்ப பிக் டேட்டா அனலிடிக்ஸ் எல்லாம் அவ்வளவு தானா?! நின்னுப்பூடுமா? என்ற கேள்வியும் கூடவே வருகின்றது இல்லையா?

தகவல் தந்தால் சேவை

இரண்டாவதாக, எந்த வெப்சைட்டிற்கு போய் பதிவு செய்தாலும், ஈமெயில் கணக்கு துவங்கினாலும் எங்களுடைய பிரைவசி பாலிசி என்று நீண்ட நெடும் ஒப்பந்தம் போல் ஒரு டாக்குமெண்டை காண்பித்து அக்ரி அல்லது டிஸ் அக்ரி என ஒரு பட்டனை செலக்ட் செய்து நம்மை ஒத்துக்கொள்ள வைத்து அதன் பின்னரே சேவைகளை வழங்குகின்றார்கள். ரொம்ப நல்லவர்களாக டிஸ்அக்ரி என்ற ரேடியோ பட்டனில்தான் டிபால்ட் செலக்ஷன் இருப்பதைப் போல் செட் செய்திருப்பார்கள்.

அப்புறம் எப்படி இந்த இணையதளங்கள் நம்மைப் பற்றிய டேட்டாவை நம்மிடம் இருந்து சுட்டு மற்றவர்களிடம் பணியார வியாபாரம் செய்கின்றார்கள் என்பதுதான் அடுத்த சந்தேகம். பக்கம் பக்கமாய் முழநீளத்திற்கு ப்ரைவசி பாலிசிகள் இருப்பதெல்லாம் எல்லாம் சரிதான். ஆனால் நீங்கள் இதுவரை ஏதாவது ப்ரைவசி பாலிசியைப் படித்து அதன் பின்னர்தான் அக்ரி என கிளிக்கியிருக்கின்றீர்களா? இல்லையே!

தனி மனித சுதந்திரம் சாத்தியமா?

வளர்ந்த நாடுகளில் எல்லாம் தனியுரிமை என்பது சட்டமாக்க பட்டு அதை கட்டி காப்பதில் அரசுகள் எல்லாம் மிகவும் கவனமாகவும், முனைப்பாகவும் செயல்படுகின்றன. இது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள நாடுகளில் கூட இன்டெர்நெட் யுகத்திற்குத் தகுந்தாற்போல் இன்னும் முழுமையாக மாற்றியமைக்கப்படவில்லை.

ஏனென்றால், இன்டெர்நெட் என்ற மாயவலை என்னென்ன அவதாரங்களை எடுக்கும், அதை எப்படி எல்லாம் எதற்கெல்லாம் பயன்படுத்த முடியும் என முன்கூட்டியே யாராலும் பெரிய அளவில் யூகிக்க முடிவதில்லை. அதனாலேயே இன்டர்நெட்டில் ஆடி காற்றில் பறக்கும் அறுந்த பட்டம் போல தனியுரிமையும், தனி மனித ரகசியங்களும் எந்த அளவிற்கு காற்றில் பறக்க விடப்படும் என்பதையும் யாராலும் துல்லியமாக கணிக்க முடியாமல் போனது.

உண்மையிலேயே வலைதள பயன்பாட்டில் தனி மனித உரிமை பிரச்சனை தலைவிரித்தாடி, அதனால் மிகக் கடுமையான சட்டங்கள் இயற்றப்படும் பட்சத்தில், பிக்டேட்டா மற்றும் அனலிடிக்ஸ் உலகத்தின் மகத்தான பயன் பாடெல்லாம் மதிப்பிழந்து போக வாய்ப்பிருக்கிறது. ஆனால் அந்த நிலைமை வருமா என்றால்

…. வரும்….. ஆனா வராது……..!!!.

எங்கேயிருக்கிறது அந்தரங்கம்?

அந்தரங்கம் என்பது நமக்கு எங்கே இருக்கிறது? படுக்கை அறையிலா? குளியலறையிலா? தெரிந்தவர்கள் யாருமில்லாத ஊரிலா? தனியாக நாம் மட்டும் செல்லும் காரிலா? நெருங்கிய உறவினர்களுடன் பகிர்ந்து கொண்ட ரகசியம், உயிர் நண்பர்களுடன் மட்டுமே பகிர்ந்து கொண்ட ரகசியம், நமக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்று பல மாய அடுக்குகளாக பிரித்து, ரகம் வாரியாக மறைந்து வைக்கப்பட்ட ரகசியங்கள் எல்லாம் இன்று ‘மாமா, டவுசர் கழண்டுச்சே!,’ என்று கண்ணுக்குத் தெரியாத உலகத்தில் நம்மை நிர்வாணமாக்கி, கதற வைக்கும் அளவுக்கு வலைதள டெக்னாலஜி நம்மை நோக்கி ஊடுருவி வந்து கொண்டிருக்கின்றது.

எல்லாம் சாத்தியம்

ஆசை, ஆசையாக நீங்கள் பல நாட்களாக ஏங்கி வாங்கிய செல்போன், அல்லது லேப்டாப் ஆன் செய்து இன்டெர் நெட்டில் இணைத்த உடன், உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் உள்ள ஒருவருக்கு/ஒரு சர்வருக்கு தகவல் போய், நீங்கள் அறியாமலே அவர்/அது உங்கள் கேமராவை ஆன் செய்து, உங்களை கண்காணிக்க முடியும் அல்லது உங்கள் வரவேற்பறையில் நடக்கும் அனைத்தையும் ரெக்கார்டு செய்து, ஏன் நேரடியாக ஒளி & ஒலி பரப்பும் செய்ய முடியும்.

வரவேற்பறையில் லேப்டாப் இருந்தால் ஓகே. அதுவே படுக்கை அறையில் இருந்தால் சிக்கல் தானே! ரொம்ப பயமுறுத்தாதீங்க பாஸ் என்கிறீர்களா? ஸ்கூல் பையனுக்கு ஸ்கூல் கொடுத்த லேப்டாப்பில் ஹோம் ஒர்க்கை பையன் தான் செய்கின்றானா என கண்காணிக்க ஒரு அப்ளிக்கேஷனை லோட் செய்து கொடுக்க பையன் அதை வீட்டில் வைத்து ஹோம் வொர்க் செய்யும் போது லேப் டாப் கேமிரா இயங்குவதை பார்த்த அப்பா எப்படி என் வீட்டிற்குள் நடப்பதை நீ ரெக்கார்ட் செய்யலாம் எனப் பள்ளியின் மீது கேஸ் போட மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்கிய நிகழ்வெல்லாம் சமீபகால சரித்திரத்தில் இருக்கின்றது பாஸ்.

உங்க வீட்டு வால் பையன் விளையாடும் வீடியோ கேம்ஸ், எதிரில் உள்ள அனைவரின் முகங்களையும் விளையாடும் ரூமில் இருக்கும் பொருட்களையும் தானாக போட்டோ எடுத்து, அந்த வீடியோ கேமைத் தயாரித்த கம்பெனிக்கு அனுப்பிக் கொண்டேயிருக்கலாம். நீங்கள் வாங்கும் ஸ்மார்ட் டீவி தொடர்ந்து உங்களை என்ன அண்ணன் நைட் பத்தரை மணிக்கு மேலே தொடர்ந்து டீவி பார்க்கிறாரே என்று கூட கண்காணிக்கலாம்.

இப்படியாக, உங்களையும், உங்கள் அந்தரங்கங்களையும், உங்கள் அனுமதி இல்லாமல், திருடர்கள், விளம்பரதாரர்கள், போலிஸ், அரசியல்வாதிகள் என்றில்லாமல் யார் கையில் வேண்டுமானாலும் கொண்டுபோய் சேர்த்துவிடலாம்.

ஸ்தம்பிக்குமா?

ஒவ்வொரு நிமிடமும் நாம் எங்கே இருக்கிறோம், எங்கே போகிறோம், என்ன செய்கிறோம், யாருடன் இருக்கிறோம், யாருடன் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், என்ன பொருட்களை வாங்குகிறோம் என்று மூன்றாம் நபருக்கு தெரியும் போதே நம்முடைய சுதந்திரம் முழுமையாய் பறிபோகின்றது. அந்த டேட்டாவை வியாபார ரீதியாக பயன்படுத்தினால் சரி.

அதை நமக்கு எதிராக பயன்படுத்த ஆரம்பித்தால் என்னவாகும்? நம் கண்ணியமும், சமூக அந்தஸ்தும் பறிபோகும். சரி, பிக்டேட்டாவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள டேட்டாவை அலசி, அதிலிருந்து, ஒரு விஷயம் நடக்கும் போது, அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்பதை யூகிக்கும் உக்திதான் பிக்டேட்டா என்பது உங்களுக்குத் தெரியும் தானே. திடீரென டேட்டாவால் வரும் நன்மை தீமைகளை உபயோகிப்பாளர்கள் புரிந்துகொண்டு ’வி ஆர் ஆல் ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்ஸ்’ என டேட்டா சுருட்டலுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தால் என்னவாகும்.

டேட்டா இஸ் த நெக்ஸ்ட் ஆயில் – டேட்டாதான் அடுத்த எரிபொருள் என அமெரிக்காவில அப்பச்சி சொன்னாக என்கின்றீர்களே! டேட்டா என்ற எரிபொருளை உபயோகிப்பாளர்கள் தர மறுத்துவிட்டால் அதனால் டேட்டா இல்லாது போய்விட்டால் பிக்டேட்டா அனலிடிக்ஸ் வண்டி நின்று போய்விடாதா என்று கேட்பீர்கள்தானே? இதற்கான பதிலை அடுத்த வாரம் பார்ப்போம்.

cravi@seyyone.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x