

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரா கண்ட் ஆகிய மாநிலங்களில் நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதனால் சந்தை வல்லுநர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நேற்றைய வர்த்தகத்தில் பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தன.
வர்த்தகத்தின் தொடக்கத்தில் நிப்டி 9122 என்னும் புதிய உச்சத்தைத் தொட்டது. அதேபோல சென்செக்ஸ் அதிகபட்சமாக 616 புள்ளிகள் உயர்ந்து 29561 புள்ளியைத் தொட்டது.
வர்த்தகத்தின் முடிவில் சென் செக்ஸ் 496 புள்ளிகள் உயர்ந்து 29442 புள்ளியில் முடிவடைந்தது. அதேபோல நிப்டி 152 புள்ளிகள் உயர்ந்து 9087 புள்ளியில் முடிவடைந்தது. 9000 புள்ளிகளுக்கு மேலே நிப்டி முடிவடைவந்து இதுவே முதல்முறையாகும். தவிர மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் 1 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தன.
துறைவாரியாக பார்க்கும்போது கேபிடல் குட்ஸ் துறை அதிகபட்ச மாக 3.06 சதவீதம் உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து ரியால்டி துறை குறியீடு 2.57 சதவீதமும், கன்ஸ்யூமர் டியூரபிள் குறியீடு 2.4 சதவீதமும், வங்கி குறியீடு 1.93 சதவீதமும் உயர்ந்தன.
சென்செக்ஸ் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி அதிகபட்சமாக 6 சதவீதம் உயர்ந்தது, அதனை தொடர்ந்து ஹெச்யூஎல், எல் அண்ட் டி, ஹெச்டிஎப்சி, சன் பார்மா ஆகிய பங்குகள் அதிகம் உயர்ந்தன. மாறாக பார்தி ஏர்டெல், ஆக்ஸிஸ் வங்கி, கோல் இந்தியா, கெயில் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய பங்குகள் சிறிதளவு சரிந்தன.
பொருளாதார சீர்த்திருத்தம்
இதுவரை செய்யப்பட்ட பொரு ளாதார சீர்த்திருத்தங்களுக்கு கிடைத்த பரிசு தேர்தல் வெற்றி என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். தவிர எதிர்பார்க்கப்பட்டதைவிட தொழில் உற்பத்தி குறியீடு சிறப்பாக வந்திருக்கிறது. பங்குச் சந்தை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாகும். அமெரிக்காவில் வட்டி விகிதம் குறித்த முடிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஆகியவை பங்குச்சந்தையின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும் என்றும் வல்லுநர்கள் கணித்திருக் கிறார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்தவிதமான கூச்சலும் இல்லாமல் பொருளாதார சீர்த்திருத்தங்களை மத்திய அரசு தொடரலாம் என டிபிஎஸ் வங்கி யின் செயல் இயக்குநர் ஆஷிஷ் வைத்யா தெரிவித்தார். ரீடெய்ல் துறை, தொழிலாளர் சட்டம் மற்றும் வங்கிகளின் வாராக்கடன் குறித்து அரசு கவனம் செலுத்தும் என நம்புவதாகவும் அவர் தெரிவித் தார்.
78 பைசா உயர்வு
நேற்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78 பைசா உயர்ந்தது. 2015-ம் ஆண்டு நவம்பர் மாத நிலைக்கு ரூபாய் மதிப்பு உயர்ந்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 78 பைசா உயர்ந்து ஒரு டாலர் 65.82 ரூபாயாக முடிவடைந்தது. இதுவரை ஆசியா பகுதியில் சிறப்பாக செயல்படும் மூன்றாவது கரன்ஸி ரூபாய் ஆகும். தென் கொரியா மற்றும் தாய்வான் நாடுகளின் நாணயத்துக்குப் பிறகு ரூபாய் மதிப்பு அதிகம் உயர்ந்திருக்கிறது. இந்த ஆண்டு சுமார் 2.7 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.