ரூ.900 கோடியில் புதிய தொழிற்சாலை: எம்.ஆர்.எஃப் திட்டம்

ரூ.900 கோடியில் புதிய தொழிற்சாலை: எம்.ஆர்.எஃப் திட்டம்
Updated on
1 min read

ஆந்திர மாநிலம் மேடக் பகுதியில் ரூ. 900 கோடி முதலீட்டில் எம்.ஆர்.எஃப் நிறுவனம் தொழிற்சாலை ஒன்றை அமைக்க உள்ளது. இப்புதிய தொழிற்சாலைக்கான ஒப்புதலை ஆந்திர மாநில அரசு வழங்கியுள்ளது.

டயர் மற்றும் டியூப் உற்பத்தியில் பிரபலமாக விளங்கும் எம்ஆர்எப் நிறுவனத்துக்கு ஏற்கெனவே மேடக் பகுதியில் ஒரு ஆலை உள்ளது. இந்த ஆலையை ஒட்டிய பகுதியில் ரூ. 900 கோடி முதலீட்டில் மற்றொரு ஆலை அமைக்க திட்டமிட்டிருந்தது.

இதற்கு மாநிலத்தின் தொழில்துறை மற்றும் மாநில முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் இந்நிறுவன உற்பத்தி மேலும் அதிகரிக்கும்.

மேடக் பகுதியில் நடைபெற்ற பெர்ஜர் பெயிண்ட் ஆலை திறப்பு விழாவில் பேசிய மாநில முதல்வர் என். கிரண் குமார் ரெட்டி, எம்.ஆர்எஃப் நிறுவனம் போன்ற பல நிறுவனங்கள் ஆந்திர மாநிலத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

எம்.ஆர்.எஃப் நிறுவனம் டயர், டியூப் விற்பனைச் சந்தையில் 30 சதவீதத்தை பிடித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் சதாசிவ பேட்டை என்ற இடத்தில் 1990-ல் தொடங்கப்பட்ட ஆலையும், 2011-ல் அங்கபள்ளி எனுமிடத்தில் தொடங்கப்பட்ட ஆலையும் செயல்பட்டு வருகிறது. புதிய ஆலை சதாசிவபேட்டை பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு ஆட்டோமொபைல் மற்றும் விமானங்களுக்கான டயர்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் ரூ. 450 கோடி முதலீட்டில் ஆலை ஒன்றை அமைக்க உள்ளதாக மாநில தொழில்துறைச் செயலர் கே. பிரதீப் சந்திரா தெரிவித்தார். தென்னிந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கில்லெட் தயாரிப்புகள் இங்கு உற்பத்தி செய்யப்பட உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in