

இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னராக நீடிக்க விரும்பவில்லை என்று ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு ரகுராம்ராஜன் எழுதிய கடிதத்தின் எதிரொலியாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.
இன்று (திங்கள்கிழமை) காலை வர்த்தக துவக்கத்தின்போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61 காசுகள் சரிந்து ஒரு டாலர் ரூ.67.69 என்ற நிலையில் இருந்தது. கடந்த ஒரு மாத காலத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு இந்த அளவு குறைந்ததில்லை.
இறக்குமதியாளர்கள் மத்தியில் டாலருக்கான தேவை அதிகரித்துள்ளதாலும் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இதேபோல் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் சரிவை சந்தித்தது.
சரிவில் இருந்து மீண்டது:
வர்த்தக நேர துவக்கத்தில் சென்செக்ஸ் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவுடன் தொடங்கினாலும் பின்னர் சரிவில் இருந்து மீண்டது. காலை 10 மணியளவில் சென்செக்ஸ் சரிவில் இருந்து மீண்டது. அப்போதையை நிலவரப்படி சென்செக்ஸ் 26,693.63 புள்ளிகளில் வர்த்தகமாகியது. இந்திய ரூபாயின் மதிப்பும் 67.65 என்ற நிலையில் இருந்து 20 காசுகள் உயர்ந்து 67.95 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.