Last Updated : 06 Dec, 2013 07:09 PM

 

Published : 06 Dec 2013 07:09 PM
Last Updated : 06 Dec 2013 07:09 PM

அன்னியச் செலாவணி மாற்று விகிதம் மாறுவதால் ஏற்படும் பாதிப்பு என்றால் என்ன

அன்னியச் செலாவணி மாற்று விகிதம் மாறுவதால் ஒரு நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதியில் பாதிப்புகள் ஏற்படும்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வது currency appreciation அல்லது revaluation என்று பார்த்தோம். $1 = ரூ.65-லிருந்து $ 1 = ரூ. 60 என அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வதாக வைத்துக்கொள்வோம்.

இதுவரை ஒரு டாலருக்கு ரூ. 65 மதிப்புள்ள இந்தியப் பொருட்களை பெற்ற அமெரிக்கர்கள் இப்பொது ரூ. 60 மதிப்புள்ள இந்தியப் பொருட்களையே பெறுவர். அதாவது, இந்திய பொருட்களின் விலைகள் அமெரிக்கர்களுக்கு உயர்ந்துள்ளது.

இதனால், அமெரிக்கர்கள் குறைவாக இந்திய பொருட்களை வாங்கக்கூடும், எனவே, இந்தியாவின் ஏற்றுமதி குறையும். ஆனால் அமெரிகர்களுக்கு இந்திய பொருட்களின் தேவை இன்றியமையாததாக இருந்தால், இந்தியாவின் ஏற்றுமதி குறையாது. பொதுவாக இந்திய துணிகளை அமெரிக்கர்கள் எவ்வளவு விலை கொடுத்துதான் வாங்குவார்கள் என்றால், (ஏற்றுமதி தேவைக்கான விலை நெகிழ்ச்சி (price elasticity) குறைவு என்று அர்த்தம்) இந்திய ரூபாய் appreciate ஆனாலும் இந்தியாவின் ஏற்றுமதி குறையாது.

இதுவரை ஒரு டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்தால், இந்தியர்கள் ரூ 65 கொடுப்பர், ஆனால், இப்போது ரூ 60 கொடுத்தாலே போதும். இதனால், இந்தியர்களுக்கு அமெரிக்க பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதால், அதிகமாக இறக்குமதி செய்வர். எனவே ரூபாய் appreciate ஆகும் போது பொதுவாக ஏற்றுமதி குறைவதும், இறக்குமதி அதிகமாவதும் உண்டு. அதே நேரத்தில் இதன் தாக்கம் ஏற்றுமதி இறக்குமதியின் விலை நெகிழ்ச்சியை பொருத்தும் அமையும்.

இதற்கு மாறாக, ரூபாய் depreciate அல்லது devalue ஆகும் போதெல்லாம் இந்தியாவின் ஏற்றுமதி உயர்ந்து, இறக்குமதி குறையும். இதிலும் விலை நெகிழ்ச்சியின் பாதிப்பு இருக்கும்.

அன்னியச் செலாவணி மாற்று விகிதம் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் மாற்றம் அடைந்துகொண்டே இருந்தால், அந்நாட்டில் பன்னாட்டு வியாபாரம் பாதிக்கப்படும். ஏனெனில், அன்னிய நாட்டு பணமதிப்பில் நம் ஏற்றுமதி, இறக்குமதியின் விலைகள் மாறிக்கொண்டே இருந்தால் எதன் அடிப்படையில் பன்னாட்டு வியாபாரம் செய்வது? எனவேதான், ஒவ்வொரு நாட்டின் மைய வங்கியும் அந்நாட்டு பணத்தின் மாற்று விகிதத்தை நிலையாக வைத்திருக்க முயற்சிக்கின்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x