இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆனந்த் சர்மா அழைப்பு

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆனந்த் சர்மா அழைப்பு
Updated on
1 min read

இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் பல துறைகளில் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு முதலீடு செய்ய வேண்டும் என்று வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா அழைப்பு விடுத்தார்.

டெல்லியில் புதன்கிழமை தொடங்கிய 12-வது பர்வேஸி திவஸ் எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களை ஒருங்கிணைக்கும் மாநாட்டில் சர்மா பேசியது:

இந்தியாவில் நூறுகோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இங்கு முதலீட்டுக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இந்தியர்களாகிய நீங்கள் வெளிநாடுகளில் வசிக்கிறீர்கள். இங்கு வந்து முதலீடு செய்யுங்கள், இந்தியர்களுடன் இணைந்து லாபமடையுங்கள்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முதலீட்டு விதிமுறைகளை அரசு தளர்த்தியுள்ளது. குறிப்பாக சில்லறை வர்த்தகம் மற்றும் விமான போக்குவரத்துத் துறையில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) உற்பத்தித்துறையின் பங்களிப்பு அதிகம் என்பதால், அரசு புதிய தேசிய அளவிலான உற்பத்தித்துறைக் கொள்கையை அறிவித்தது. தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலங்கள் (என்ஐஎம்இஸட்) 14 பகுதிகளில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உலகிலுள்ள மிகச் சிறந்த தொழில் பேட்டைகளைப் போல இது திகழும். தொழில் டவுன்ஷிப்பாக இது உருவாக்கப்பட உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி 5 சதவீத அளவுக்குச் சரிந்துள்ளது. வரும் காலங்களில் இந்த சரிவிலிருந்து இந்தியா மீள்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. வர்த்தக பற்றாக்குறையைப் போக்க ஒரே வழி இத்துறையில் வளர்ச்சியை எட்டுவதுதான்.

இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும். அதிலும் குறிப்பாக உற்பத்தித்துறையில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இத்துறையில் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்காக எப்டிஐ விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் இந்தியா வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. மேலும் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வர அரசு உறுதியாக உள்ளது. அரசு கொள்முதல் விதிமுறைகள் அனைத்தும் இனி உண்மையானதாக மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று அவர் கூறினார்.

ஊழலை ஒழிப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. லஞ்சம், ஊழல் தொடர்பான தகவல் அளிப்போரை பாதுகாப்பதற்கான சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார். இந்தியாவில் முக்கியமான துறைகளில் ஒளிவு மறைவற்ற வெளிப்படைத் தன்மை நிலவுகிறது. இதேபோல நிலக்கரித் துறையிலும் கட்டுப்பாட்டு அமைப்பு உருவாக்க்பபடும் என்று கூறினார்.

2000-ம் ஆண்டிலிருந்து 2013-ம் ஆண்டு வரை இந்தியாவுக்குள் 30,900 கோடி டாலர் அளவுக்கு நேரடி அன்னிய முதலீடு வந்துள்ளது. அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்திலும், டெல்லி, தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், குஜராத் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளதாக அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in