

ஜனவரி முதல் மார்ச் காலாண்டுக்கு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை. கடந்த காலாண்டில் உள்ள வட்டி விகிதமே தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிறு சேமிப்பு திட்டங்களான பிபிஎப், கிஸான் விகாஸ் பத்திரம், செல்வ மகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. பொது பி.எப் திட்டத்துக்கு 8% வட்டி வீதமும், கிஸான் விகாஸ் பத்திரம் திட்டத்துக்கு 7.7% வட்டி வீதமும், மூத்த குடிமக்களுக்கான ஐந்து வருட சிறு சேமிப்பு திட்டத்துக்கு 8.5% வட்டி விகிதமும் தொடர்கிறது.
ஒட்டுமொத்தமாக பொருளா தார சூழல் காரணமாக, வட்டி விகிதம் குறைந்திருக்கும் சூழலில் பல்வேறு நிபுணர்களும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு மிகக் பெரிய அளவில் வட்டி குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தனர். சமீபத்தில் தொழிலாளர் வைப்பு நிதி ஆணையம் நடப்பு நிதியாண்டுக்கான பி.எப் டெபாசிட் வட்டி விகிதத்தை 8.65 சதவீதமாகக் குறைத்தது.
இதுவரை சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்பட்டு வந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டு முதல், சந்தை நிலவரத்துக்கு ஏற்ப காலாண்டுக்கு ஒருமுறை வட்டி நிர்ணயம் செய்யப்படும் என்று கடந்த பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது.