

இந்தியாவில் 20 கோடி சந்தாதாரர்களை கொண்ட முதல் டெலிகாம் நிறுவனமாகி இருக்கிறது பார்தி ஏர்டெல் நிறுவனம். கடந்த 20 வருடங்களாக இந்தியாவில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், முதல் முறையாக 20 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருக்கிறது.
1994-ம் ஆண்டு இந்த நிறுவனத்துக்கு உரிமம் கிடைத்தது. 1995-ம் ஆண்டு தன்னுடைய சேவையை இந்த நிறுவனம் தொடங்கியது. வாடிக்கையாளர்கள் அளவு மற்றும் வருமானம் அளவில் இந்தியாவில் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஏர்டெல். உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நான்காவது நிறுவனம் இது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்த நிறுவனம் 10 கோடி சந்தாதாரர்களை புதிதாக சேர்த்திருக்கிறது. இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் 28.10 சதவீதத்தை ஏர்டெல் வைத்திருக்கிறது.
இதற்கடுத்து இரண்டாவது இடத்தில் வோடபோன் இருக்கிறது. இந்த நிறுவனம் 16.21 கோடி சந்தாதாரர்களையும், 23.06 சதவீத சந்தை மதிப்பையும் வைத்திருக்கிறது.