

கட்டுமானத்துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது குறித்த பிரச்சினையில் நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் விரைவில் தீர்க்கப்படும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
இது குறித்து முடிவெடுப்பதற்காக நான்(ஆனந்த சர்மா) மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கமல்நாத் ஆகியோர் விரைவில் சந்திக்க இருப்பதாகவும் ஆனந்த் சர்மா தெரிவித்தார். விரைவில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார் ஆனந்த சர்மா. இதன் மூலம் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் அன்னிய முதலீடு அதிகரிக்கும் என்றார்.
கடந்த மாதம் அன்னிய நேரடி முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (டி.ஐ.பி.பி.) கட்டுமானத்துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதில் இருந்து வந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இருந்தாலும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு தள்ளிப்போடப்பட்டது. இதற்கு நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் எழுப்பிய சில கேள்விகள்தான் காரணம். வெளிநாட்டு கட்டுமான நிறுவனங்கள் கட்டாயம் இருக்க வேண்டிய காலமான மூன்று ஆண்டுகளுக்குள் வெளியேறலாம் என்றும், குறைந்தபட்ச கட்டிட அளவை 50,000 சதுர மீட்டரில் இருந்து 20,000 சதுர மீட்டராக டி.ஐ.பி.பி. குறைத்துவிட்டது.
இது தவிர, ஒரே சீரான முதலீட்டு அளவாக அதாவது தாய் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இருந்தாலும் சரி, இந்திய நிறுவனத்துடன் இணைந்த கூட்டு நிறுவனமாக இருந்தாலும் சரி முதலீட்டு அளவு 50 லட்சம் டாலராக நிர்ணயிக்கப்பட்டது. இதற்குமுன்பு தாய் நிறுவனத்தின் துணை நிறுவனத்தின் முதலீட்டு அளவு ஒரு கோடி டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் முதலீட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட நிறுவன திட்டப் பணி நிறைவடைந்தது குறித்து உள்ளூர் நிர்வாகத்திடம் பணி முடிப்பு சான்றிதழ் பெற்று, அதை வேறு ஒரு வெளிநாட்டு நிறுவனத்துக்கு மூன்று ஆண்டு காலத்திற்குள்ளாகவே விற்றுவிட்டு வெளியேறலாம் என்று டிஐபிபி பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாகவும் அமைச்சரவை கேள்வியெழுப்பியுள்ளது.
இருப்பினும் வெளிநாட்டு நிறுவனத்துக்கு மாற்றித் தருவது என்பது நிர்ணயிக்கப்பட்ட மூன்று ஆண்டு காலக் கெடுவுக்குள் ஒரே ஒரு முறை மட்டும் அனுமதிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2000-வது ஆண்டிலிருந்து இதுவரை (2013) நகர்ப்புற குடியிருப்பு, வீட்டு வசதி உள்ளிட்ட கட்டுமானப் பணிகளில் அன்னிய நேரடி முதலீடு 2,276 கோடி டாலராக உள்ளது. இந்தியாவில் அன்னிய நேரடி முதலீட்டு அளவில் இது 11 சதவீதம் ஆகும். 2005-ம் ஆண்டு கட்டுமானத் துறையில் 100 சதவீத அளவுக்கு டிஐபிபி அனுமதி அளித்தது. அன்னிய நேரடி முதலீட்டை கண்காணிக்கும் டிஐபிபி இது தொடர்பாக அறிக்கை மற்றும் சுற்றறிக்கைகளை அவ்வப்போது வெளியிடும்.
கட்டுமானத் துறையில் 100 சதவீத அளவுக்கு அன்னிய நேரடி முதலீடுகள் அதாவது டவுன்ஷிப், வீட்டு வசதி மற்றும் கட்டுமான மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது கடுமையான விதிமுறைகளை அரசு விதித்துள்ளது. தங்கத்தின் மீதான இறக்குமதி கட்டுப்பாடு தளர்த்தப்பட வேண்டும் என்று சர்மா வலியுறுத்தினார். இதன் மூலம் கள்ளக்கடத்தலைத் தடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். இது தொடர்பாக உரிய சமயத்தில் முடிவெடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
தங்கம் இறக்குமதி தொடர்பாக தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணிப்பு அவசியம். இந்த விஷயத்தில் நடுநிலையான அணுகுமுறை தேவை. தொழில் துறை தேவைக்காக தங்கம் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது. அவர்கள் அதிக அளவு இறக்குமதி செய்வார்கள் என கருதவில்லை. எனவே தங்கம் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.
நாட்டின் தங்க இறக்குமதியில் 15 சதவீத அளவை ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி துறையினர் செய்கின்றனர். தங்களின் தொழிலைக் காப்பாற்ற இறக்குமதி கட்டுப்பாடுளைத் தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கை இவர்கள் தரப்பில் முன் வைக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இத்துறையினரின் ஏற்றுமதியை அதிகரிக்க இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து வர்த்தகச் செயலர் எஸ்.ஆர். ராவ், பொருளாதார விவகாரத்துறை செயலர் அர்விந்த் மாயாராம் ஆகியோர் ஆராய்ந்து வருவதாக ஆனந்த் சர்மா கூறினார்.
ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான காலத்தில் ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி ஏற்றமதி 2,400 கோடி டாலராகும். தங்கம் மீதான கட்டுப்பாடு காரணமாக கள்ளக்கடத்தல் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியதையும் ஆனந்த் சர்மா சுட்டிக் காட்டினார்.