Last Updated : 10 Jan, 2017 07:06 PM

 

Published : 10 Jan 2017 07:06 PM
Last Updated : 10 Jan 2017 07:06 PM

2016 டிசம்பரில் வாகன விற்பனை கடும் சரிவு: பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் பாதிப்பு

பணமதிப்பு நீக்கத்தின் காரணமாக கடந்த டிசம்பர் மாதத்தில் வாகனங்களின் விற்பனை கடுமையாக சரிந்துள்ளன. குறிப்பாக 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் சரிவைக் கண்டுள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

மாதாந்திர அளவிலான விற்பனையில் டிசம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த வாகன விற்பனை 18.66 சதவீதம் சரிந்துள்ளது. பணமதிப்பு நீக்கத்தின் காரணமான வாகன உற்பத்தி தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன், இது தொடர்பான புள்ளி விபரங்களையும் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

அதில் பணமதிப்பு நீக்கத்தின் காரணமாக நுகர்வோரிடையே எழுந்த அச்சத்தின் காரணமாக டிசம்பர் மாதத்தில் ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், கார்கள் என அனைத்து விற்பனையும் சரிந்தன. குறிப்பாக 2016 டிசம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த வாகன விற்பனையும் 18.66 சதவீதம் சரிந்து 12,21,929 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. 2015ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 15,02,314 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய இந்த அமைப்பின் இயக்குநர் விஷ்ணு மாத்தூர், ‘ 2000-வது ஆண்டின் டிசம்பர் மாதத்துக்கு பிறகு இது மிகப் பெரிய சரிவு. ஒட்டுமொத்த வாகன விற்பனையில் 21.81 சதவீத விற்பனை சரிந்துள்ளோம் என்றார். பணமதிப்பு நீக்க நடவடிக்கை நுகர்வோர்களிடையே பாதகமான எண்ணங்களை உருவாக்கியுள்ளது என்றும் கூறினார். ஆனால் விதிவிலக்காக வர்த்தக பயன்பாட்டுக்கான சிறிய ரக வாகனங்கள் விற்பனை மட்டும் 1.15 சதவீதம் அதிகரித்து 31,178 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன, ஆனால் இதர பிரிவு வாகனங்களின் விற்பனை சரிந்துள்ளன என்றும் கூறினார்.

இந்த விற்பனை சரிவு தற்காலிகமானதுதான் என்றாலும், பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தே விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தனிநபர் வருமான வரிவிலக்கு வரம்பை அதிகரிப்பது உள்ளிட்ட நுகர்வோரை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள் இருந்தால் ஆட்டோமொபைல் விற்பனை உயர்வதுடன், ஒட்டுமொத்த பொருளாதார ஏற்றதுக்கும் வழி வகுக்கும் என்றார்.

உள்நாட்டு கார் விற்பனை 2015ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகிறபோது சுமார் 8.14 சதவீத விற்பனை சரிந்துள்ளது. 2015-ம் ஆண்டு டிசம்பரில் 1,72,671 கார்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் 2016- ம் ஆண்டு டிசம்பரில் உள்நாட்டு கார் விற்பனை எண்ணிக்கை 1,58,617 ஆக உள்ளது.

பயணிகள் வாகன விற்பனை 1.36 சதவீதம் சரிந்துள்ளன. 2015 டிசம்பரில் 2,30,959 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. 2016 டிசம்பரில் 2,27,824 வாகனங்களே விற்பனையாகியுள்ளன.

இதுதவிர இரு சக்கர வாகன விற்பனையும் 1997 க்கு பிறகு மிகப் பெரிய சரிவைக் கண்டுள்ளன. 2015 ம் ஆண்டு டிசம்பரில் 11,67,621 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் 2016-ம் ஆண்டு டிசம்பரில் இரு சக்கர வாகன விற்பனை 9,10,235 ஆக சரிந்துள்ளன. இரு சக்கர வாகன விற்பனையில் கிராமப்புற சந்தை சரிபாதியாக உள்ளது. பண மதிப்பு நீக்கம் கிராமப்புற சந்தையை கடுமையாக பாதித்துள்ளது. வர்த்தக வாகன விற்பனை சரிவு 5.06 சதவீதமாக உள்ளது என்றும் துறை வாரியான விபரங்களையும் மாத்தூர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x