

நேற்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடி வடைந்தன. சென்செக்ஸ் குறியீடு 52 வார உச்சத்தை தொட்டது. அதேபோல நிப்டி குறியீடு 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. டிஎல்எப் உள்ளிட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்றாக வந்திருப்பது மற்றும் உள்நாட்டு மற்றும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து சந்தையில் முதலீடு செய்வது ஆகிய காரணங்களால் பங்குச் சந்தையில் ஏற்றம் நிலவியது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதிக்கு பிறகு நிப்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோல கடந்த ஆண்டு ஜூலை 23-ம் தேதி சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது. சென்செக்ஸ் 440 புள்ளிகள் உயர்ந்து 28343 என்னும் புள்ளியில் முடிவடைந்தது. அதே போல நிப்டி 136 புள்ளிகள் உயர்ந்து 8744 என்னும் புள்ளியில் முடிவடைந் தது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 28478 என்னும் அதிகபட்ச புள்ளியை தொட்டது.
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் 1 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன. தவிர அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்து முடிந்தன. அதிகபட்சமாக ஆட்டோ குறியீடு 1.81 சதவீதம் உயர்ந்தது. அதனை தொடர்ந்து தகவல் தொழில்நுட்பம், வங்கி, எப்எம்சிஜி ஆகிய துறை குறியீடுகள் உயர்ந்து முடிந்தன.
சென்செக்ஸ் பட்டியலில் ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, மாருதி, கெயில், ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவை உயர்ந்தன. 30 பங்குகள் உள்ள இந்த பட்டியலில் பார்தி ஏர்டெல் பங்கு மட்டும் 2.8 சதவீதம் சரிந்தது.
புதிய உச்சத்தில் சந்தை மதிப்பு
பிஎஸ்இ பட்டியலில் உள்ள அனைத்து பங்குகளின் சந்தை மதிப்பும் புதிய உச்சத்தை தொட்டது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் பிஎஸ்இ சந்தை மதிப்பு ரூ.110.70 லட்சம் கோடியாக இருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் மட்டும் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.1.39 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்தது. சந்தை மதிப்பு அடிப்படையில் உலகளவில் முதல் 10 பங்குச் சந்தைகளில் பிஎஸ்இயும் ஒன்று. இந்தியாவில் அதிக சந்தை மதிப்பை கொண்ட நிறுவனமாக டிசிஎஸ் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5.02 லட்சம் கோடியாக உள்ளது.