Published : 30 May 2017 10:06 AM
Last Updated : 30 May 2017 10:06 AM

தொழில் முன்னோடிகள்: லெவி ஸ்ட்ராஸ் (1829 1902)

வல்லுநர் என்பவர் எல்லா பதில்களும் தெரிந்தவர், நீங்கள் சரியான கேள்விகளைக் கேட்டால்.

- லெவி ஸ்ட்ராஸ்

உலகம் முழுக்க ஆறு முதல் அறுபது வயது வரை ஆண்களும், பெண்களும் விரும்பி அணியும் உடை ஜீன்ஸ். விண்ணுலகிலிருந்து இதைப் பார்க்கும் ஒருவர் பெருமைப்படுவார். அவர் 1873 இல் ஜீன்ஸ் பேன்ட்டை அறிமுகம் செய்த லெவி ஸ்ட்ராஸ்.

ஜெர்மனியில் யூத இனத்தைச் சேர்ந்த ஹிர்ஷ் என்பவர் உலர்ந்த பழங்கள், துணிகள் விற்பனை செய்து வந்தார். அவரது ஏழு குழந்தைகளில் லெவி கடைக்குட்டி. ஜெர்மனியில் யூதர்கள் மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்டார்கள். இதனால், ஏராளமான யூதர்கள் அமெரிக்காவில் தஞ்சமடைந்தார்கள். ஹிர்ஷின் இரண்டு மகன்கள் அமெரிக்கா போனார்கள். குடும்ப பிசினஸான உலர்ந்த பழங்கள், துணிகள் விற்பனையைத் தொடங்கினார்கள்.

லெவியின் பதினேழாம் வயதில் அப்பா நோய் வாய்ப்பட்டு இறந்தார். லெவி, தன் அம்மா, இரண்டு அக்காள்களுடன் அமெரிக்கா வந்தார். அண்ணன்களின் பிசினஸில் சேர்ந்தார்.

இந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவில் ஒரு பொருளாதார யுகம் பிறந்துகொண்டிருந்தது. ஜனவரி 24, 1848. ஜான் ஸட்டர் என்பவர் கலிபோர்னியாவில் மரம் அறுக்கும் தொழிற்சாலை கட்டிக்கொண்டிருந்தார். மார்ஷல் என்னும் தொழிலாளி அருகிலிருந்த ஆற்றில் ஏதோ பளபளப்பதைப் பார்த்தார். கொண்டுபோய் ஸட்டரிடம் கொடுத்தார். அது தங்கம்! இன்னும் தேடுதல் நடத்தி, கிடைக்கும் தங்கத்தை சமமாகப் பங்கிட்டுக்கொள்ள முடிவு செய்தார்கள். அவர்களுக்குள் ஒப்பந்தம் உஷ், ரகசியம், யாருக்கும் சொல்லக்கூடாது.

ஆனால், மறைக்கக்கூடிய சமாச்சாரமா இது? காட்டுத்தீயாகச் செய்தி அமெரிக்கா முழுவதும் பரவியது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், மக்கள் கலிபோர்னியா வந்தார்கள். 1849 இல் 80,000 பேர்; 1850 இல் 3 லட்சம் பேர். இந்தப் புலம் பெயர்தல், California Gold Rush (கலிபோர்னியா தங்கத்தை நோக்கி மக்கள் விரைவு) என்றே வரலாற்றில் இடம் பிடித்துவிட்டது.

1853-ல் கலிபோர்னியாவிலிருந்து சான் பிரான்சிஸ்கோ போக முடிவு செய்தார் லெவி. அவர் வித்தியாசப் புத்திக்காரர். அவர் புறப்பட்டது தங்கம் தேட அல்ல. திடீர் மக்கள் தொகைப் பெருக்கத்தால், கலிபோர்னியாவில் எல்லாப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு, அமோக லாபம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள. லெவி ஸ்ட்ராஸ் என்னும் தன் பெயரில் சொந்தக் கம்பெனி தொடங்கினர். உலர்ந்த பழங்கள், ஆடைகள், கைக்குட்டைகள், உள்ளாடைகள் என ஏகப்பட்ட பொருட்கள் வியாபாரம்,

லெவி விற்பனை செய்த பொருட்களில் கான்வாஸ், டெனிம் துணிகளில் செய்யப்பட்ட பேன்ட் ஒரு முக்கிய ஐட்டம். இது சுரங்கத் தொழிலாளிகள் வேலை பார்க்கும்போது அணியும் முரட்டு உடையாக இருந்தது. லெவிக்கு எப்போதும், வாடிக்கையாளர்களை நேரடியாகச் சந்தித்து விற்பனை செய்யப் பிடிக்கும். கரடு முரடான சுரங்கப் பகுதிகளுக்கு நடந்துபோவார். தொழிலாளிகளோடு பேசுவார். பேன்ட்களின் அளவு தங்களுக்குப் பொருத்தமாக இல்லை. டைட்டாகவோ, லூசாகவோ இருப்பதால் வேலை செய்யும்போது சிரமமாக இருக்கிறது என்று குறைபட்டுக்கொண்டார்கள். லெவி உடனேயே தீர்வு கண்டார். பான்ட்களுக்குப் பதில் கான்வாஸ், டெனிம் துணிகளைத் தருவித்தார். பல தையல் கலைஞர்களோடு கை கோர்த்தார். தொழிலாளிகளின் அங்க அளவுகளைத் துல்லியமாக எடுத்துக் கன கச்சிதமாகப் பேன்ட் தைத்துக் கொடுத்தார். ``சுரங்க ஆடையா, கூப்பிடு லெவியை’’ என்று அவர் புகழ் பரவியது.

தொழிலாளிகளுக்கு ஒரு பிரச்சினை இருந்தது. அவர்கள் சுரங்கத்துக்குள் அடிக்கடி உட்கார்ந்து, எழுந்திருக்கும் கட்டாயம். அத்தோடு தங்கள் பேன்ட் பாக்கெட்களில் டார்ச் லைட், ஸ்க்ரூ டிரைவர், ஸ்பானர் ஆகியவற்றைக் கொண்டு போவார்கள். அடிக்கடி பாக்கெட்டிலிருந்து வெளியே எடுப்பார்கள். இதனால், பேன்ட் உறுதியாக இருந்தபோதிலும், பாக்கெட்களும், கவட்டைப் பகுதிகளும் கிழிந்தன. புதுப் பேன்ட் வாங்கவேண்டிய கட்டாயம். லெவியிடம் குறையைத் தெரிவித்தார்கள். பேன்ட் ஆயுளை நீடிக்க என்ன செய்வதென்று அவருக்கும் தெரியவில்லை.

1872. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது. நெவடா நகரில் ஜேக்கப் டேவிஸ் என்னும் தையற்கலைஞர் இருந்தார். லெவியிடம் துணிகள் வாங்கி ஆடைகள் தைத்துக் கொடுப்பவர். அவரிடமிருந்து கடிதம் வந்தது ``டெனிம் பேன்ட்டின் முன்புற, பின்புறப் பாக்கெட்கள், கவட்டை ஆகிய பகுதிகளில் ரிவெட் (Rivet) அடித்துப் புதுமாதிரியான ஸ்டைலில் பேன்ட் தைத்திருக்கிறேன். வந்து பாருங்கள்.”

லெவி போய்ப் பார்த்தார். தொழிலாளிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் என்று நம்பிக்கை தோன்றியது. இருவரும் கை கோர்க்க முடிவெடுத்தார்கள். ரிவெட் அடித்த டெனிம் பேன்ட் வடிவமைப்பின் காப்புரிமைக்குச் சேர்ந்து விண்ணப்பித்தார்கள். கிடைத்தது. 1873 இல் முதல் லெவி ப்ளூ ஜீன்ஸ் தயார். கடுமையான உடல் உழைப்பிலும், கிழிசலே வராமல் தாக்குப் பிடித்தது. அமோக வரவேற்பு. லெவி, டேவிஸ் இருவரும் ஜீன்ஸ் தயாரிப்புக்காகத் தொழிற்சாலை தொடங்கினார்கள். சுரங்கங்களில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலும், லெவி ஜீன்ஸ் உழைக்கும் வர்க்கத்தின் உடையானது. நூறு தையற்கலைஞர்களைப் பணியில் அமர்த்துமளவுக்கு விற்பனை பெருகியது.

கம்பெனி தொடர் வளர்ச்சி கண்டது. லெவி திருமணம் செய்துகொள்ளாமல் தனிமரமாக இருந்தார். 1890. நிர்வாகத்தை அக்காள் மகன்களிடம் ஒப்படைத்தார். ரெயில் போக்குவரத்தில் முதலீடு, அரசாங்கத்தின் வாணிப அமைப்புகளில் கெளரவப் பதவிகள் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டார். ஏழை மாணவர்களின் கல்விக்காகக் கணிசமான பண உதவிகள் செய்தார். 1902 இல், 73 ஆம் வயதில் மரணமடைந்தார்.

லெவி மறைவுக்குப் பின், ஜீன்ஸ் ஆடைகள் யாருமே நினைத்துப் பார்த்திருக்க முடியாத அளவுக்குச் சமுதாய அங்கீகாரமும், அந்தஸ்தும் பெற்றன. அமெரிக்காவின் மேற்குப் பகுதியில், மான்ட்டானா, வையோமிங், அரிசோனா போன்ற மாநிலங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் பரப்பளவில் விரிந்து கிடக்கும் பண்ணைகள் உண்டு, இவற்றில் ஏராளமான கால்நடைகள் வளர்ப்பார்கள். இவற்றை மேய்ப்பவர்கள் கெளபாய்ஸ் (Cowboys) என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் கையில் துப்பாக்கியோடு, குதிரைமேல் உலா வருவார்கள். இவர்களை மையமாக்கி சினிமாக்கள் உருவாயின. பின்புலம் அமெரிக்காவின் மேற்குப் பகுதி என்பதால், இத்தகைய திரைப்படங்கள் வெஸ்டேர்ன்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் ஹீரோ, நேர்மையான ஆனால் முரட்டுத்தனமான ஆக்ஷன் கிங். டமால், டுமீல் என்று எதிரிகளைச் சுட்டுத் தள்ளுவார்.

1900 களில் மெளனப் படங்கள் தயாரிக்கப்பட்டன. பெரும்பாலும் வெஸ்டேர்ன்கள். இந்தக் காலகட்டத்தின் சூப்பர் ஸ்டார், வில்லியம் ஹார்ட். 74 படங்களில் ஹீரோ; 52 படங்களின் இயக்குநர்; 19 படங்களின் தயாரிப்பாளர்; 11 படங்களின் கதாசிரியர். 1914 இல் இவர் நடித்த 5 கெளபாய் படங்களிலும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து நடித்தார். இதற்குப் பிறகு, ஆண்மைத்தனமான உடை என்றாலே, ஜீன்ஸ் பேன்ட் என்னும் பிம்பம் மக்கள் மனங்களில் உருவாகிவிட்டது.

ஜான் வெய்ன். 1926 முதல் 1976 வரையிலான 50 வருடங்களில், 169 படங்களில் நடித்த சுப்ரீம் ஸ்டார். 1939 இல் வெளியான ஸ்டேஜ்கோச் (Stagecoach) என்னும் திரைப்படத்தில் லெவி ஜீன்ஸ் அணிந்து நடித்தார். லட்சக் கணக்கான ஜான் வெய்ன் ரசிகர்கள் லெவி ஜீன்ஸுக்கு மாறினார்கள்.

இரண்டாம் உலகப் போர் நடந்தபோது, வீரர்களின் கடுமையான வாழ்க்கைக்கு ஜீன்ஸ் மட்டுமே ஈடு கொடுக்கும் என்று அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்தது. சீருடை தேவைப்படாத வேளைகளில் வீரர்கள் ஜீன்ஸ் அணியத் தொடங்கினார்கள். போரிலிருந்து திரும்பிய பிறகு, அடிக்கடி துவைக்கத் தேவையில்லாத, நெடுநாள் உழைக்கும் ஜீன்ஸ் அவர்களுடைய அன்றாட ஆடையாயிற்று.

இசைக் கலைஞர்கள் பிங் க்ராஸ்பி, ப்ரூஸ் ஸ்ப்ரிங்ஸ்ட்ரீன், நடிகர்கள் மார்லன் ப்ராண்டோ, பால் ந்யூமான், மர்லின் மன்றோ ஆகியோர் படங்களில் ஜீன்ஸில் தோன்றினார்கள். இந்த உடைக்குச் சமுதாய அங்கீகாரம் எகிறியது.

1960 களில் ஹிப்பிக் கலாசாரம் பரவியபோது அவர்கள் தங்கள் சமுதாய எதிர்ப்பின் அடையாளமாகத் தேர்ந்தெடுத்த உடை ஜீன்ஸ்.

ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ் எப்போதும் அணிந்தது ஜீன்ஸ்தான். ஃபேஸ்புக் மார்க் ஜூகர்பெர்க், பே பால் சி.இ.ஓ. டானியல் ஷுல்மேன், அமெரிக்க அதிபராக இருந்தபோது பல முறை ஜீன்ஸில் தோன்றிய ஒபாமா ஆகியோரின் ஆடைத்தேர்வு, லெவி ஸ்ட்ராஸுக்கு மானசீக சல்யூட்.

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x