

இன்று நாம் பரவலாகக் கேள்விப்படும் முதலீட்டு வார்த்தை அசெட் அலகேஷன் என்பது. 5 வருடங்களுக்கு முன்பு இதைப்பற்றி யாரும் அதிகமாகப் பேசவில்லை, ஆனால் இன்று எல்லோராலும் பேசப்படுகிறது. அதைப்பற்றியும், அதனுடைய பயனைப் பற்றியும் நாம் இங்கு பார்க்கலாம்.
முன்பே சொன்னதுபோல முதலீட்டில் நாம் அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் போடக்கூடாது. பொதுவாக 3 வகையான அசெட் எடுத்து கொள்வார்கள். ஈக்விட்டி, கடன் சார்ந்த திட்டம் மற்றும் தங்கம். அதற்கு முக்கியக் காரணம் இந்த மூன்றையும் சிறிது சிறிதாக சேமிக்கலாம், தேவையானபோது உடனடியாக எடுத்துக்கொள்ள முடியும். இது எவ்வளவு சதவீகிதம் என்பது ஒருவருடைய முதலீட்டு இலக்கு, ரிஸ்க் எடுக்கும் திறன், மற்றும் எவ்வளவு காலம் என்பதைப் பொறுத்தது.
பொதுவாக 3 வகையான அசெட் அலகேஷன் முறைகள் எல்லோராலும் பின்பற்றப்படுகிறது.
1. யுக்தி அசெட் அலகேஷன்
(Strategic Asset Allocation)
ஒருவருடைய அசெட் அலகேஷனை முடிவு செய்யும் முன்பு ரிஸ்க்கை அறிந்து கொள்வதற்கு, சில கேள்விகளைக் கேட்டு ஓரளவிற்கு அவருடைய ரிஸ்க்கைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். மற்றும் அவருடைய முதலீட்டு இலக்குகள் என்னவென்று அறிந்து, எவ்வளவு சதவிகிதம் ஒவ்வொரு முதலீட்டிலும் என்று முடிவு செய்யவேண்டும்.
இதற்கு ஒவ்வொரு முதலீடும் கடந்த 10 ஆண்டுகளில் எவ்வாறு செயல்பட்டுள்ளது, எவ்வளவு ரிடர்ன்ஸ் எதிர்பார்க்கலாம் என்பதை வைத்து மிக்ஸ் செய்வது. உதாரணமாக ஒருவருடைய ரிஸ்க், சராசரி என எடுத்துக்கொண்டால் 50:30:20 (ஈக்விட்டி கடன் சார்ந்த திட்டம் தங்கம்). எதிர்பார்க்கும் ரிடர்ன்ஸ், ஈக்விட்டி 15%, கடன் சார்ந்த திட்டம் 9%, தங்கம் 10%. அவர்களுடைய அசெட் அலகேஷன் 50*1.5:30*.9:20*1=7.5+2.7+2=12.2% சந்தை எப்படி இருந்தாலும் இதைக் கடைசி வரை பின்பற்றுகிறார்கள்.
2. சந்தர்ப்பவாத அசெட் அலகேஷன்
(Tactical Asset Allocation)
இன்னொன்று, எந்தவிதமான சதவிகிதத்தையும் கடைப்பிடிக்காமல் இன்று எந்த முதலீடு நன்றாகச் செயல்படுகிறதோ அதில் நிறைய முதலீடு செய்வது சந்தையின் போக்கிற்கேற்ப அந்த சதவிகிதத்தைக் கடைபிடிக்கிறார்கள்.
இது மிகவும் ஆக்டிவாக செயல்படுகிற முறை, இதற்கு ஒருவர் நிறைய நேரம் ஒதுக்கவேண்டும் அத்துடன் எங்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும். இது அதிக ரிஸ்க்; அதே சமயம் நல்ல ரிடர்ன் வரவும் வாய்ப்புள்ளது. ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் எடுக்காமல் சந்தையின் செயல்பாட்டின்படி சமன் செய்வது.
3. டைனமிக் அசெட் அலகேஷன்
(Dynamic Asset Allocation)
யுக்தி அசெட் அலகேஷன்போல எதுவும் செய்யாமல், அலகேஷன் சதவிகிதம் முடிவு செய்தவுடன், சந்தையின் தற்போதைய சூழலை பார்த்து முதலீடு செய்வது. இந்த முறையும் ஆக்டிவாக செயல்படுவது. ஆனால் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை தக்கவைத்துக் கொள்வது. அதாவது சந்தை கீழே இருந்தால் நிறைய ஈக்விட்டி, மற்ற இரண்டில் கம்மியாக இருக்கும். இதில் ஒருவர் நிறைய நேரம் செலவிட வேண்டும். அது கூடுதல் ரிடர்ன் தருவதற்கு நல்ல வாய்ப்புள்ளது. மேலும் ஒவ்வொரு வருட முடிவிலும் பார்ப்பதால் ஏற்ற இறக்கம் ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். இது கொஞ்சம் ப்ராக்டிகலான முறை, ரிஸ்க் குறைவு ஆனால் நேரம் ஒதுக்கவேண்டும்.
நிறைய முதலீட்டாளருக்கு அசெட் அலகேஷன் பற்றித் தெரிவதில்லை, அதனால் அவர்கள் ஒரே ஒரு முதலீட்டிலேயே அனைத்து பணத்தையும் முடக்கிவிடுகிறார்கள். மேலும் எந்த ஒரு அசெட்டும் எல்லா காலத்திலும் நன்றாக செயல்படாது.
பெரும்பாலும் ஒன்று நன்றாகச் செயல்பட ஆரம்பிக்கும்போது யாருக்கும் அதில் நம்பிக்கை வராது, அது நன்றாக செயல்பட்டபின்பு, எல்லாராலும் பேசப்படும்போது அது உச்சத்தை அடைந்திருக்கும். இதனால் மீண்டும் மீண்டும் தவறு செய்வதோடு வங்கிதான் பாதுகாப்பு என்ற முடிவிற்கு நிறைய பேர் வருவதுண்டு.
ஒரு முதலீட்டை ஆரம்பிக்கும் பொழுது கடந்த காலத்தில் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்று பார்ப்பதோடு, அது வரும் காலங்களில் எவ்வாறு செயல்படும் என்பதைப் பார்ப்பதும் மிகவும் அவசியமானது. நம்முடைய இன்றைய வாழ்க்கையில், பெரும்பாலும் நம்முடைய முடிவுகள் அனைத்தும் கடந்த கால நிகழ்வுகளை ஒட்டியே இருக்கிறது.
இதில் நம்முடைய முதலீட்டு முறையும் அடங்கும். கடந்த காலத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர வரும் காலமும் அதுபோல இருக்கும் என்று முன்பு செய்ததைத் தவிர்க்கவும்.
நகைச்சுவையாக சொன்னால் அசெட் அலகேஷன் என்பது திருமணத்திற்கு ஜாதகம் பார்ப்பதுபோல. திருமணத் தின்போது இருவருடைய ஜாதகமும் சமன்செய்யப்படும். அதாவது ஒருவருக்குக் கஷ்டம் வரும்போது அடுத்தவருக்கு சுகம் இருக்கும். இல்லாவிட்டால் இரண்டும் ஒன்றாக வந்தால் சமாளிப்பது கடினம்.
அசெட் அலகேஷன் 3 வகையான முதலீட்டை சமன் செய்கிறது. என்னால் ஏற்ற இறக்கத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியும், அதனால் தோன்றும் உணர்ச்சிகள் என் கட்டுபாட்டிற்குள் என்று நினைப்பவருக்கு அசெட் அலகேஷன் ஒத்து வராது, இதைக் காதலித்து திருமணம் செய்பவர்களோடு ஒப்பிடலாம். இது எளிதில் புரிவதற்காகச் சொல்லப்பட்ட உதாரணம், இதை அப்படியே எடுத்துக்கொண்டு விவாதிக்க வேண்டாம்.
மற்றொரு விஷயம், அசெட் அலகேஷன் என்பது ஒருவருடைய போர்ட்போலியோ (PORTFOLIO) முழுவதுக்கும் உட்பட்டது. இதை நிறையபேர் புரிந்து கொள்வதில்லை. உதாரணத்திற்கு இன்று வீட்டுக்கடன், எண்டோவ்மென்ட் பாலிசி மற்றும் ஓரளவிற்கு தங்கம் வாங்காதவர்களையும் காண்பது அரிது.
இதில் பெரும்பாலான முதலீடு இருக்கும், அவரிடம் அசெட் அலகேஷன் பற்றிப் பேசினால், அவர் தான் செய்யக்கூடிய முதலீட்டில் மீண்டும் தங்கம் மற்றும் கடன் சார்ந்த திட்டத்தில் பங்கு இல்லை என்று வருத்தப்படுவார். அசெட் அலகேஷன் செய்யும்போது எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
இன்று முதலீடு செய்பவர்கள் ரிஸ்க் இல்லாமல் ரிடர்ன்ஸ் அதிகம் கிடைக்குமா என்று கேட்கிறார்கள். ரிஸ்க்கும் ரிடர்ன்ஸும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. அசெட் அலகேஷன் இதை ஓரளவிற்குச் சமன் செய்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ரிடர்ன்ஸ் கண்டிப்பாக தரும்.
சாராம்சம்
2003 முதல் 2007 வரை, சந்தை ஒரே திசையில் சென்றதால் அசெட் அலகேஷன் பற்றி அதிகமாக யாரும் பேசவில்லை இந்தியாவைப் பொறுத்தவரை. 2008ல் சந்தை சரிந்தவுடன், பலரும் பலவிதமான முதலீட்டை பற்றிச் சிந்தித்ததால் உருவானதே இந்த அசெட் அலகேஷன்.
இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில் ஒவ்வொருவருடைய வேலைக்குச் செலவிடும் நேரமே அதிகமாக இருப்பதால், முதலீட்டில் கவனம் கொள்வதற்கு பலருக்கும் நேரம் இல்லை. மேலும் சந்தை முன்பு எப்போதும் இருந்ததைவிட மிகவும் டைனமிக்காகச் செயல்படுவதால், நமக்கு அசெட் அலகேஷன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, அதோடு இது ஏற்ற இறக்கத்தை, ஓரளவிற்குக் கட்டுக்குள் வைத்துள்ளதால் பலருக்கும் டென்ஷன் குறைவு.
யுக்தி அசெட் அலகேஷன் முறையை விட டைனமிக் அசெட் அலகேஷன் முறை இன்று பலராலும் விரும்பபடுகிறது. அதற்குச் செலவிடும் நேரத்திற்கான ரிடர்ன்ஸ் இதில் கூடுதலாகக் கிடைக் கிறது. இப்படி தனி மனிதர் இதைக் கண்காணிப்பதைவிட, சில அல்கோரித முறைப்படி, சில ஃபண்ட் இப்போது வர ஆரம்பித்திருக்கிறது.
இந்த முறையில் அதிக ரிடர்ன்ஸ் எதிர்பார்க்க முடியாது, ஆனால் நல்ல ரிடர்ன்ஸ் நீண்ட கால அடிப்படையில் கிடைப்பது உறுதி. முன்னேறிய நாடுகளில், முதலீட்டில் பெரிதளவு பின்பற்றபடுவது அசெட் அலகேஷன் என்று சொன்னால் மிகையாகாது.
padmanaban@fortuneplanners.com