

ஐசிஐசிஐ வங்கி நிகர லாபம் ரூ. 2,611 கோடி
தனியார் வங்கியில் முன்னணியில் உள்ள ஐசிஐசிஐ வங்கி டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் ரூ. 2,442 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய லாபத்தை விட 19 சதவீதம் குறைவாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 3,018 கோடியாக இருந்தது.
வங்கியின் கடன் சுமை அதிகரித்ததே லாபம் குறைந்ததற்குக் காரணமாகும். டிசம்பர் காலாண்டில் மொத்த வாராக்கடன் 6.82 சதவீதத்திலிருந்து 7.91 சதவீதமாக உயர்ந்துள்ளது. வாராக்கடனுக்கான ஒதுக்கீடு செய்த தொகை அதிகரித்ததன் காரணமாக நிகர லாபம் சரிந்தது.
வட்டி மூலமான வருவாய் டிசம்பர் காலாண்டில் ரூ. 5,453 கோடியிலிருந்து ரூ. 5,363 கோடியாகக் குறைந்துவிட்டது. வட்டி அல்லாத பிற இனங்கள் மூலமான வருமானம் ரூ. 3,939 கோடியாகும். இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ. 4,217 கோடியாக இருந்தது. கட்டணங்கள் மூலமான வருமானம் 10.3 சதவீதம் அதிகரித்து ரூ. 2,262 கோடியாக இருந்தது.
ஜிசிபிஎல் லாபம் 19% உயர்வு
கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடெக்ஸ்ட் லிமிடெட் (ஜிசிபிஎல்) நிறுவனம் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் ரூ.231 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் ஈட்டிய லாபத்தை விட 19 சதவீதம் அதிகமாகும்.
நிறுவனத்தின் விற்பனை வருமானம் ரூ.1,263 கோடியாகும். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் இத்துறை கடும் நெருக்கடியைச் சந்தித்தபோதிலும் நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 12% அதிகரித்துள்ளது. ஒரு பங்குக்கு ரூ.1 ஈவுத் தொகை அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்நிறுவனத் தயாரிப்புகள் 28% வளர்ச்சியை எட்டியுள்ளன.
இந்தோனேசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிறுவனத் தயாரிப்புகள் தொடர்ந்து வளர்ச்சியை எட்டி வருகின்றன.
இந்த ஆண்டு அமல்படுத்தப்பட உள்ள சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை மூலம் மிகச் சிறப்பான பொருளாதார சூழல் உருவாகி நுகர்வோர் பொருள்களின் தேவை அதிகரிக்கும் என்று நிறுவனத் தலைவர் ஆதி கோத்ரெஜ் தெரிவித்துள்ளார்.
பஜாஜ் ஆட்டோ லாபம் 5.27% சரிவு
பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் லாபம் டிசம்பர் காலாண்டில் 5.27 சதவீதம் சரிந்து ரூ.976.82 கோடியாக இருந்தது. உள்நாடு மற்றும் ஏற்றுமதி சந்தையில் காணப்பட்ட தேக்க நிலையே லாபம் குறையக் காரணமாகும்.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.1,031 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் 9 சதவீதம் சரிந்து ரூ.5,354 கோடியைத் தொட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ. 5,884 கோடியாக இருந்தது.
இந்தக் காலாண்டில் மொத்தம் 8.51 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் 9.51 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்திருந்தது. மூன்றாம் காலாண்டில் விற்பனை 10.49 சதவீத அளவுக்குச் சரிந்துள்ளன.
ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 3.38 லட்சமாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் 4.10 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. ஏற்றுமதி 17 சதவீதம் சரிந்துள்ளது.
நிறுவனப் பங்குகள் 1.93 சதவீதம் உயர்ந்து ரூ. 2,880-க்கு பங்குச் சந்தையில் வர்த்தகமாயின.
சிண்டிகேட் வங்கி லாபம் ரூ. 93 கோடி
சிண்டிகேட் வங்கி டிசம்பர் காலாண்டில் ரூ. 93.56 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வங்கி ரூ. 119.67 கோடி நஷ்டத்தைச் சந்தித்திருந்தது.
வங்கியின் வருமானம் ரூ. 6,554 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய வருமானத்தைக் காட்டிலும் 5.91 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் வருமானம் ரூ. 6,188.25 கோடியாகும்.
மூன்றாம் காலாண்டில் வங்கி வரி செலுத்துவதற்கும், வங்கிக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கியுள்ளது.
வங்கியின் நிகர வாராக் கடன் 8.69 சதவீதமாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் வாராக் கடன் அளவு 4.61 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கியின் பங்குகள் 2 சதவீத அளவுக்குச் சரிந்து ரூ. 67.90 என்ற விலையில் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமாயின.