

கடந்த இரு ஆண்டுகளில் இந்தியாவில் 81 உயர் அதிகாரிகள் நீக்கப்பட்டிருப்பதாக பிரைம் டேட்டாபேஸ் நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. பிஎஸ்இ 500 நிறுவனங்களில் 81 நபர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் தலைமைச் செயல் அதிகாரிகள், நிர்வாக இயக்குநர்கள், இயக்குநர் குழு உறுப்பினர்கள் ஆகியோர் நீக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இதுவரை இந்த நீக்கம் நடந்திருக்கிறது.
தனிப்பட்ட காரணங்களுக்காக தலைவர்கள் விலகினார்கள் என பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவித்தாலும், நிறுவனங்களின் செயல்பாடுகள் சரியில்லாததே வெளியேற்றத்துக்கு காரணமாகும்.
உதாரணத்துக்கு சிப்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுபானு சக்சேனா கடந்த ஆகஸ்டில் ராஜினாமா செய்தார். ஆனால் விலகுவதற்கு முந்தைய ஜூன் காலாண்டு நிகர லாபம் பாதியாக சரிந்தது. அதேபோல புராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தின் ஷாந்தனு கோஸ்லா ராஜினாமா செய்தார். அந்த நிறுவனத்தின் பெரும்பாலான பிரிவுகள் முக்கியமான சந்தையை இழந்ததும் ராஜினாமாவுக்கு ஒரு காரணமாகும்.
மனிதவளப்பிரிவு நிறுவனத்தை சேர்ந்த மைக்கேல் பேஜ் கூறும் போது, உயரதிகாரிகள் நியமனம் தற்போது அதிகரித்துள்ளது. உயரதிகாரிகள் வாங்கும் சம்பளம் மிகவும் அதிகமாகும். நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பாடுகள் சரியில்லை என்னும் பட்சத்தில் முக்கியத்தலைவர்கள் வெளியேற்றம் என்பது தவிர்க்க முடியாதது என்றார்.