

கறவைமாடு வளர்ப்புத் தொழிலில் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் அதிக வருமானத்தை பெருக்கவேண்டும் என்ற நோக்கில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், பெரும்பாலான கறவையினங்கள் உரிய தருணத்தில் பருவத்திற்கு வருவதில்லை, சினை பிடிப்புத்திறன் குறைவாக உள்ளதாகவும், ஒரு மாட்டிலிருந்து கிடைக்கும் பாலின் அளவும் குறைவாக கிடைக்கின்றது எனவும் கண்டறியப்பட்டது.
இதன் அடிப்படையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் நவீன தொழில்நுட்பங்களில் ஒன்றான தனுவாசு - தாது உப்புக் கலவையின் மூலமாக இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகான முடியும் என்ற நோக்கத்தில் திருநெல்வேலி மாவட்ட கறவைமாடு வளர்ப் போர்களிடையே தனுவாசு தாது உப்புக்கலவையை பிரபலப்படுத்தும் திட்டம் வடிவமைக்கப்பட்டு, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) நிதியுதவியுடன் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள கால்நடை விரிவாக்கக் கல்வித்துறையில் செயல்படுத் தப்பட்டு வருகிறது.
தாது உப்புகளின் வகைகள்
இத்திட்டத்தின் பல்வேறு பயன்கள் குறித்து இக் கல்லூரி உதவி பேராசிரியர் சே.செந்தில்குமார் கூறியது:
தாது உப்புக்களில் மிகுதியாக தேவைப்படுவை மற்றும் குறைந்த அளவு தேவைப்படுபவை என இருவகை உண்டு. கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், கந்தகம் போன்றவை மிகுதி யாகத் தேவைப்படும் தாது உப்புக்களாகும்.
இரும்பு, மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம், அயோடின், கோபால்ட், செலீனியம், மாலிப்டினம் போன்ற தாது உப்புக்கள் குறைந்த அளவே தேவைப்படும் தாது உப்புக் களாகும். தாது உப்புக்கள் தாவரங்கள், பசுந்தீவனப் பயிர்கள், விலங்குகளின் எலும்புத்தூள், ரத்தத்தூள், இறைச்சித்தூள் மற்றும் தாதுப் பொருள் கலவை போன்றவை மூலம் கிடைக்கின்றன.
தனுவாசு தாது உப்புக் கலவையின் மூலப்பொருள்கள்
தாது உப்புகள் அளவு (விழுக்காடு) -கால்சியம் 23, பாஸ்பரஸ் 12, மெக்னீசியம் 6.5, இரும்பு 0.5, அயோடின் 0.026, தாமிரம் 0.077, மாங்கனீசு 0.12, கோபால்ட் 0.012, துத்தநாகம் 0.38, ப்ளோரின் 0.07 (அதிக பட்சம்), செலீனியம் 0.3, கந்தகம் 0.5.
வளரும் கால்நடைகளுக்குப் போதுமான அளவு கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை தீவனத்தில் அளிக்காவிட்டால் எலும்புருக்கிநோய் ஏற்பட்டு எலும்பை பலவீனமாக்கும். சினை மாடுகளில் கன்று உற்பத்திக்கும் பால் உற்பத்திக்கும் இந்த இரு தாதுக்களும் மிகவும் தேவைப்படுகின்றன.
கறவை மாடுகளில் கன்று ஈன்ற 72 மணி நேரத்திலிருந்து 15 நாட்களுக்குள் பால்சுரம் என்ற நோய் ஏற்பட்டு பால் உற்பத்தி மிகவும் பாதிக்கப்படும். இதற்குக் காரணம் கால்சியம் பற்றாக்குறை ஆகும். ஏனெனில் அதிக பால் சுரக்கும் பசுக்களில் ரத்தத்தில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், தாது உப்புக்கள் மூலம் தொடர்ந்து வெளியேறுகின்றன. அதாவது ஒரு கிலோ பால் உற்பத்தி செய்ய 2.8 கிராம் கால்சியம் மற்றும் 2 கிராம் பாஸ்பரஸ் சத்து தேவைப்படுகிறது.
ஆகவே இச்சத்துக்களை கறவை மாடுகளுக்கு தொடர்ந்து தேவையான அளவு அளிப்பதன் மூலம் அப்பற்றாக்குறையைச் சரிகட்ட முடியும். பாஸ்பரஸ் சத்துப் பற்றாக்குறை ஏற்படும் போது பசுக்களில் சினையுறுதல் சம்பந்தமாக பிரச்சினைகள் ஏற்படுவதால் பாஸ்பரஸ் சத்து தினசரி தீவனத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். பயறுவகைத்தீவனத்தில் பயிர்களில் சுண்ணாம்புச் சத்து அதிக அளவிலும் பாஸ்பரஸ் சத்து குறைந்து அளவிலும் உள்ளன.
குறிப்பாக நன்கு வளர்ந்த பசுந்தீவனப் பயிர்களில் பாஸ்பரஸ் சத்து குறைவாக இருப்பதால், பாஸ்பரஸ் சத்து போதிய அளவில் கிடைக்கத் தவிடு வகைகளை கால்நடைகளுக்கு அளிக்கலாம்.
இனவிருத்திக்குத் தாது உப்புக்களின் அவசியம்
தாமிரம், துத்தநாகம், கோபால்ட், இரும்பு, மாங் கனீசு, அயோடின், மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் கால்நடைகளுக்கு மிகக் குறைந்த அளவே தேவைப்படுகின்றன. இந்த குறைந்த அளவு, கூடுதல் தீவனம் மூலம் சரிவர கிடைக்காவிட்டால் கால்நடைகள் பலவகையில் பாதிக்கப்பட்டு பொருளாதார இழப்பு ஏற்படக்கூடும்.
ஆகவே இத்தாதுக்களின் பற்றாக்குறை ஏற்படின், நொதிப் பொருட்களின் செயல்திறன் பாதிக்கப்பட்டு அதனால் மலட்டுத் தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு அளிப்பதாக தனுவாசு - தாது உப்புக் கலவை விளங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு 9486258393 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.