மீண்டும் வால்மார்ட்: இந்தியாவில் நுழைய தீவிரம்

மீண்டும் வால்மார்ட்: இந்தியாவில் நுழைய தீவிரம்
Updated on
1 min read

சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் இந்தியாவில் நுழைய தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக நிறுவனத்தின் பெயரை மீண்டும் பதிவு செய்துள்ளது.

சங்கிலித் தொடர் நிறுவனங்களை அமைத்து சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுவதில் மிகவும் பிரபலமாக விளங்குவது அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த பார்தி எண்டர்பிரைசஸ் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது

இரு நிறுவனங்களிடையிலான 6 ஆண்டுக்கால ஒப்பந்தம் கடந்த அக்டோபரில் முறிந்துபோனது. இதைத் தொடர்ந்து தன்னிச்சையாக இந்தியச் சந்தையில் நுழைய வால்மார்ட் திட்டமிட்டுள்ளது.

இதற்காக இந்நிறுவனம் வால்மார்ட் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் புதிய நிறுவனத்தைத் தொடங்கி அதை இந்திய நிறுவன சட்டத்தின் கீழ் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளது. இத்தகவலை வர்த்தக அமைச்சக அதிகாரி தெரிவித்தார். புதிய நிறுவனத்தை பதிவு செய்வதற்கான விண்ணப்பம் ஜனவரி 15-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

பார்தி குழுமத்துடன் ஒப்பந்தம் முறிந்து போனதைத் தொடர்ந்து இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகளையும், இந்தியாவின் அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கைகளையும் வால்மார்ட் நிறுவனம் ஆராய்ந்தது.

இதையடுத்து இந்தியச் சந்தையில் நுழையத் தீர்மானித்து அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது. முதல் கட்டமாக புதிய நிறுவனத்தை பதிவு செய்துள்ளது.

2013-ம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் உள்ள நிறுவனங்களிடையே சமநிலை போட்டியை உருவாக்கும் ஆணையம் (சிசிஐ), இந்தியா விலுள்ள பார்தி குழுமத்தின் 50 சதவீத பங்குகளை வால்மார்ட் வாங்குவதற்கு அனுமதி அளித்தது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த வர்த்தக தொழிலில் ஈடுபட அனுமதிப்பதென முடிவு செய்யப்பட்டது. இதன்படி பார்தி வால்மார்ட் பிரைவேட் நிறுவனம் இந்தியாவில் மொத்த விற்பனை அங்காடிகளை தொடங்கின. இது சில்லறை நுகர்வோரை எந்த வகையிலும் சென்றடையவில்லை.

2008-ம் ஆண்டிலிருந்தே இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் மூலம் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நிறுவனங்கள் ஈடுபடுவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டியது வால்மார்ட். இது தொடர்பான அறிக்கை அமெரிக்காவிலிருந்து வெளியானது.

இது தொடர்பாக இந்தியாவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த 2012- ம் ஆண்டு டிசம்பரில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு கடந்த மாதம் தனது அறிக்கையை மாநிலங்

களவையில் தாக்கல் செய்தது. அதில் அரசியல்வாதிகளை நிர்பந்தித்ததற்கான எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய அதிகாரிகள், அரசியல் தலைவர்களுக்கு எவ்வித தொகையும் லஞ்சமாக வால்மார்ட் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் அரசு தாக்கல் செய்த நடவடிக்கை தொடர்பான அறிக்கையில், வெளிநாட்டு நிறுவனம் ஊழலை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டது தொடர்பாக விசாரிக்குமாறு உத்தரவிட்டதாகத் தெரிவித்தது. அமெரிக்க அதிகாரிகள் ஏதேனும் வரம்பு மீறி செயல்பட்டார்களா என்பதை விசாரிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.-பி.டி.ஐ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in