

ஜிஎஸ்டி கவுன்சில் 9-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமை யில் இரண்டு நாட்களாக நடை பெற்றது. இந்த கூட்டத்திலும் உறுதியான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
ஜிஎஸ்டி நடைமுறைப்படுத் துவதில் குழப்பம் நீடித்தாலும் செப்டம்பருக்குள் நடைமுறைப் படுத்தப்படும் என்று ஜேட்லி தெரிவித்துள்ள நம்பிக்கை 90 சதவீதம் உறுதியானது. இந்த நிலையில் அதற்கு முன்பாக, ஏற்கெனவே மாநில வணிக வரி துறை மற்றும் மத்திய விற்பனை வரி துறைகளின் கீழ் டின் / சிஎஸ்டி எண் பதிவு செய்துள்ள வர்த்தகர்கள் ஜிஎஸ்டிக்கு என்று தனியாக வரி கணக்கு எண் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டது.
ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்திய பிறகு இதற்கான நடைமுறைகளை தொடங்கினால் நிர்வாகக் குழப்பங்கள் உருவாகும் என்று முன்கூட்டியே பதிவு செய்து கொள்வதற்கான சூழலையும் மத்திய அரசு உருவாக்கியது.
இதன்படி ஏற்கெனவே டின் / சிஎஸ்டி எண் வைத்துள்ள வர்த் தகர்கள் ஜிஎஸ்டிக்கென உருவாக் கப்பட்ட இணையதளத்தின் மூலம் பழைய எண்களின் அடிப்படை யில் பதிவு செய்து கொண்டு, புதிதாக ஜிஎஸ்டி எண் பெற்றுக் கொள்ளலாம் என கூறியிருந்தது.
இதற்கான குறிப்பிட்ட காலக் கெடுவையும் அறிவித்திருந்தது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் பதிவு செய்வதற்கான அட்ட வணையையும் வெளியிட்டது. தமிழ்நாட்டு வர்த்தகர்கள் பதிவு செய்வதற்கான கால அளவு ஜனவரி 1 முதல் ஜனவரி 15 ஆம் தேதி என அறிவித்திருந்தது.
இந்த தேதிக்குள் பழைய டின் எண்ணுக்கு பதிலாக புதிய ஜிஎஸ்டி எண் பெற்றுக் கொள்ளலாம். இந்த மாதத்தில் அதற்கான காலக்கெடு தொடங்கி ஏற்கெனவே 4 நாட்கள் முடிவடைந்துவிட்ட நிலையில் எஞ்சிய நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
ஆனால் பணமதிப்பு நீக்க குழப்பத்தால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள தமிழக வர்த்தகர்கள் இதில் கவனம் செலுத்தாமலேயே உள்ளனர் என்கின்றனர் ஆடிட்டர்கள். இந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் பதியவில்லை என்றால் அவர்கள் தங்களது வரிக்கணக்கில் மாதந்தோறும் தாக்கல் செய்யும் உள்ளீட்டு வரிச் சலுகையை இழக்கும் சூழல் உருவாகும் என்கின்றனர்.
புதிய தகவல்கள்
வணிக வரித்துறையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தகவல்களை அப்படியே பயன்படுத்திக் கொள்வதற்கான வசதியை ஜிஎஸ்டி இணையதளம் வழங்குகிறது. இவற்றில் திருத்தம் இருந்தால் ஆறு மாதங்களுக்குள் மேற்கொள்ளலாம் என்கிற வசதி யையும் வழங்குகிறது. ஆனால் தமிழக அரசு அதிகாரிகளோ பழைய விவரங்கள் அடிப்படை யில் பதிவு செய்ய வேண்டாம். புதிய தகவல்களை உள்ளீடு செய்யுங்கள் என வர்த்தகர்களுக்கு வலியுறுத்துவதாகவும் குறிப்பிடு கின்றனர். தொழிலை தொடங்கிய போது கொடுக்கப்பட்ட விவரத் துக்கும், இப்போதைய விவரங் களுக்கும் மாற்றங்கள் இருக்கும் நிலையில், இதற்கான ஆவணங் களை தயாரிக்க காலக்கெடு இல்லை எனவும் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
அனுமதிக்கப்பட்ட நாட்களுக்கு பிறகு புதிதாக ஜிஎஸ்டி எண்ணுக்கு விண்ணப்பிக்க மத்திய அரசு வரி அலுவலகத்துக்குச் செல்வதா. மாநில வணிகவரித்துறை அலு வலகத்துக்கு செல்வதா என்கிற குழப்பம் உருவாகியுள்ளது. இதற்கான அதிகாரம் பெற்றவர்கள் யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது என்கின்றனர். தவிர புதிய வரி எண்ணை வாங்குவதற்கான நடைமுறை ஏறக்குறையை ஒரு வாரம் ஆகும் என்கிற நிலையில் வர்த்தகர்களுக்கு இது கூடுதலான சுமையாக இருக்கும்.
இன்னொரு புறம் டின்/ சிஎஸ்டி எண்ணை ஜிஎஸ்டி எண்ணாக மாற்றிக் கொள்வதற்கான காலக் கெடுவில் உள்ள குழப்பத்தையும் சுட்டிக் காட்டுகின்றனர் வர்த்தகர் கள். புதுச்சேரி யூனியன் பிரதேசத் துக்கு 1 மாதத்தை அனுமதித்த மத்திய அரசு தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா போன்ற பரப் பளவிலும், மக்கள்தொகையிலும் பெரிய மாநிலங்களுக்கு 15 நாட் களை மட்டுமே அனுமதித்துள்ளது என்பதும் குழப்பங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் ஜிஎஸ்டி கவுன் சிலின் அடுத்த கூட்டம் 16-ம் தேடி மீண்டும் கூடும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த குழப்பங் களுக்கு முடிவு கிடைக்குமா என்பதை வர்த்தகர்களும் கவலை யுடன் கவனித்து வருகின்றனர்.
தொடர்புக்கு: maheswaran.p@thehindutamil.co.in