

கிழக்காசிய நாடுகளுடனான வர்த்தக இணைப்பு மற்றும் உறவுக்கு இந்தியாவினுடைய `கிழக்கு நோக்கிய கொள்கை’ நன்கு உதவியாக இருக்கும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
`சாசெக்’ என்று சொல்லக்கூடிய தெற்காசிய நாடுகளின் துணை பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நேற்று புது டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது: சாசெக் கூட்டமைப்பு எடுத்து வரும் முயற்சிகள் நாடுகளின் வேலைவாய்ப்பின்மை, பேரியல் பொருளாதார சூழ்நிலை, கட்டமைப்பு சிக்கல்கள் ஆகியவற்றைக் களைவதற்கு உதவும்.
இந்தியா கிழக்கு நோக்கிய கொள்கையை பின்பற்றி வருகிறது. இதன் மூலம் கிழக்காசிய நாடுகள் மற்றும் தென் கிழக்காசிய நாடுகளுடனான இணைப்பு மற்றும் உறவுகள் வலுப்பெறும். துறைமுகங்களை செயல்படுத்துவது எளிதாகியுள் ளது. குறிப்பாக வங்கதேசம் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் துறைமுகங்களை எளிதாக பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவில் உள்ள வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேளாண்மை மற்றும் காடு சார்ந்த தொழில்கள் மேம்படும்.
கடினமான சூழ்நிலைகளிலும் கூட சாசெக் கூட்டமைப்பு நாடுகள் ஒன்றாக இருக்க வேண்டும். அண்டை நாடுகளுடன் இந்தியா எப்போதும் மிகச் சிறப்பான உறவைக் கொண்டிருக்கிறது. ஆபத்து காலங்களில் சிறப்பான பங்களிப்பை இந்தியா செய்து வருகிறது.
நேபாளத்தில் நிலநடுக்கம் வந்தபோதும் இலங்கையில் சுனாமி தாக்கிய போதும் வங்கதேசத்தில் புயல் தாக்கியபோதும் இந்தியா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் பல்வேறு உதவிகளை செய்திருக்கிறது.
சாசெக் நாடுகளுடன் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் உறுப்பு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி துறைகளில் உறுப்பு நாடுகள் தகவல்களை பகிர்ந்து கொண்டு இணைந்து செயல்பட வேண்டும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் வங்கதேசம், பூட்டான், நேபாளம், இலங்கை, மாலத் தீவுகள், மியான்மர் ஆகிய நாடுகளின் நிதியமைச்சர்கள் கலந்து கொண்டு விவாதித்தனர். இந்த மாநாட்டில் தொலைநோக்கு அறிக்கை வெளியிடப்பட்டது. உறுப்பு நாடுகளுக்கிடையே இணைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஆகியவை மேம்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் மொத்த உறுப்பு நாடுகளின் ஜிடிபி 7000 கோடி டாலராக உயர்த்தவும் மேலும் உறுப்பு நாடுகளில் 2025-ம் ஆண்டுக்குள் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாசெக் கூட்டமைப்பு 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் வங்கதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன.