

அடுத்த (2017-18)நிதியாண்டுக் கான பட்ஜெட் அறிவிப்பு தேதி இறுதி செய்யப்படுவதற்கு முன் தேர்தல் ஆணையத்தோடு மத்திய நிதியமைச்சகம் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருக்கிறது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் வர இருப்பதால் எந்தவொரு இடையூறும் வரக் கூடாது என்பதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆலோசனை நடத்தப்படுகிறது.
சமீபத்தில் மத்திய அரசு பட்ஜெட்டில் பல்வேறு மாறுதல்களை கொண்டு வந்தது. ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்தது. இதுவரை பிப்ரவரி மாதம் இறுதி நாளிலேயே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதையும் தற்போது மாற்றி பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலேயே தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இந்நிலையில் வரும் ஆண்டில் பிப்ரவரி மாதம் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதியை இறுதி செய்வதற்கு முன் தேர்தல் ஆணையத்தோடு ஆலோசனை நடத்துவது அவசியம் என்று கருதுவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் ஐந்து மாநில தேர்தல்களும் ஒவ்வொரு கட்டமாகத்தான் நடைபெற இருக்கிறது. பட்ஜெட் தயாரிப்பில் எந்த வகையிலும் தலையீடு இருக்கக்கூடாது என்று மத்திய அரசு நினைப்பதாக கூறினார்.
பொதுவாக பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை நடக்கும். தற்போது பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. பட்ஜெட்டின் அனைத்து நடைமுறைகளையும் மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளது.