

ரிசர்வ் வங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் வட்டிக் குறைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிடும், அதுவும் பணவீக்க இலக்கை ஜனவரியில் எட்டினால் மட்டுமே என்று பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் அடுத்த வருடம் 0.75 சதவீத அளவுக்கு வட்டிக் குறைப்பு இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
வரும் டிசம்பர் 2-ம் தேதி நடக்க இருக்கும் கடன் மற்றும் நிதிக்கொள்கை கூட்டத்திலும் வட்டிக் குறைப்பு இருக்காது என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பணவீக்கம் குறைவது, பருவமழை மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை அதிகரிப்பது ஆகியவை வட்டிக் குறைப்புக்கான சாத்தியங்களை அதிகப்படுத்தும் என்று அறிக்கை கூறியிருக்கிறது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டியை அதிகரிக்கும்போது கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் இல்லாமல் இருக்கும் என்று கூறியிருக்கிறது. நாட்டின் அந்நிய செலாவணியை அதிகரிக்க, அரசு பத்திரங்களில் அந்நிய முதலீட்டு வரம்பு அளவான 500 கோடி டாலரை 3,000 கோடி டாலராக உயர்த்த வேண்டும் என்று பேங்க் ஆப் அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. ரூபாய் மதிப்பை ஸ்திரமாக வைத்திருப்பதற்கு 3,500 முதல் 4,500 கோடி வரையிலான அமெரிக்க டாலரை வரும் மார்ச் 2016க்குள் ரிசர்வ் வங்கி வாங்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறது.